ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தை மாத்திரம் வரையறுத்துள்ளது : நாட்டில் ஊழல் மோசடி இல்லாத துறை ஏதும் இல்லை என்கிறார் மைத்திரி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 21, 2023

ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தை மாத்திரம் வரையறுத்துள்ளது : நாட்டில் ஊழல் மோசடி இல்லாத துறை ஏதும் இல்லை என்கிறார் மைத்திரி

(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)

ஊழல் மோசடிகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் ஜனாதிபதி செயலகத்தை மாத்திரம் வரையறுத்ததாக காணப்படுகிறது. அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நாடு முழுவதும் ஊழல் மோசடி வியாபித்துள்ளமை சிறந்ததல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டில் ஊழல் மோசடி இல்லாத துறை ஏதும் இல்லை. அந்த அளவுக்கு ஊழல் மோசடி வியாபித்துள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பேன் என நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினேன்.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தேன். ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

எனது ஆட்சியில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பான முறைகேடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை ஸ்தாபித்தேன். அந்த ஆணைக்குழு 2019 ஆம் ஆண்டு வரை சிறந்த முறையில் செயற்பட்டது. அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாட்டில் வாழும் ஒட்டு மொத்த மக்களுக்கும் சுமையாக உள்ள ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில் இடம்பெறும் மோசடி தொடர்பில் ஆராய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்தேன். ஆனால் இதுவரை முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை ஜனாதிபதி செயலகத்தில் உள்ளன. ஆனால் நடைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஊழலுக்கு எதிராக வினைத்திறனான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், போதைப் பொருள் ஒழிப்புக்கு எதிராக தேசிய மட்டத்தில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தேன். இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்த தீர்மானித்தேன். அதற்கமைய சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நால்வரை தூக்கிலிட கைச்சாத்திட்டேன்.

மரண தண்டனையை நிறைவேற்றினால் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியாது என எனது அரசாங்கத்தின் பிரதமரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் எனது தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டார்கள். ஆனால் நாட்டு மக்களுக்காக மரண தண்டனையை செயற்படுத்தும் தீர்மானத்தை கைவிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தேன்.

மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பில் நான் எடுத்த தீர்மானத்தை ஒரு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. போதைப் பொருள் ஒழிப்புக்கு எதிராக முன்னெடுத்த திட்டங்கள் நிறுத்தப்பட்டன. நான் தற்போது நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு உட்பட்டுள்ளேன்.

அரச நிர்வாகம் அனைத்திலும் ஊழல் மோசடிகள் தீவிரமடைந்துள்ளன. காணி அமைச்சில் அதிக ஊழல் மோசடிகள் இடம்பெறுகின்றன. ஊழல் மோசடியில் ஒரு சாதாரண நபர் தொடர்புபடும்போது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை துரிதப்படுத்தப்படுகிறது, ஆனால் பெரும்புள்ளிகள் மோசடிகளில் ஈடுபடும்போது அவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் மந்த கதியில் உள்ளன. ஆகவே இவ்வாறான தன்மை மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment