பிரேமதாச காலத்தில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் நீக்கப்பட்டது போன்று எமது அரசாங்கம் எவரையும் பழிவாங்காது - பிரதமர் தினேஷ் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 8, 2023

பிரேமதாச காலத்தில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் நீக்கப்பட்டது போன்று எமது அரசாங்கம் எவரையும் பழிவாங்காது - பிரதமர் தினேஷ்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் அரசாங்க ஊழியர்கள் கொத்துக்கொத்தாக வேலை நீக்கம் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் எனினும் எமது அரசாங்கத்தில் அவ்வாறு எந்த பழிவாங்கல்களுக்கும் இடம் கிடையாது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (8) அரச ஊழியர்கள் தொடர்பில் கேள்வி யொன்றை முன்வைத்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்க நிறுவனம் ஒன்றில் தொழிற்சங்கத்தை சார்ந்த அதிகாரி ஒருவர் அலுவலகத்தில் இருந்த மின்னஞ்சல் வசதிகளை உபயோகப்படுத்தினார் என்ற காரணத்திற்காக கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்தில் இருந்து அவர் கலவானை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவ்வாறு இடம் பெற்றிருந்தால் அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அதற்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த விடயத்தை ஏற்கனவே அறிவித்திருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் கலந்துரையாடி பதில் வழங்குவதற்கு தயாராக வந்திருக்க முடியும். எனினும் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் அல்லது திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான பதில் வழங்கப்படும்.

தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் பிரச்சினை தொடர்பாக சபையில் எதிர்க்கட்சித் தலைவர் குரலெழுப்புவது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். அத்துடன் வியப்படைகின்றேன். ஏனென்றால் அவரது தந்தையார் ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள் கொத்துக்கொத்தாக அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.

சிறு சம்பள அதிகரிப்பைக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் செய்தமைக்காக 83,000 பேர் அவ்வாறு வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். அந்த சமயத்தில் நாம் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அவர்களுக்கு தொழில் வழங்குமாறு பல தடவைகள் கூறியும் அவர்களுக்கு தொழில் வழங்கப்படவில்லை. எனினும் எதிர்க்கட்சித் தலைவரது வேண்டுகோள் தொடர்பில் எமது அரசாங்கம் அவ்வாறு செயல்படப்போவதில்லை எமது அரசாங்கம் அவ்வாறு பழிவாங்கும் அரசாங்கம் அல்ல என்றார்.

அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பதிலளிக்கையில், தந்தை என்ற வகையில் அவரின் நல்லவிடயங்களை முன்னுக்கு கொண்டுசெல்வோம். தேவையற்ற விடயங்கள் இருப்பின் அவற்றை புறந்தள்ளிவிடுவோம்.

உங்களது மகன் நீங்கள் செய்யும் அனைத்தையும் செய்வார் என நான் அவ்வாறு நினைக்கவி்ல்லை. ரணசிங்க பிரேமதாசவின் மகன் என்றதற்காக அவர் செய்த, கூறிய அனைத்தையும் சரி என நான் கூறுவதில்லை. எனக்கு என மனசாட்சி இருக்கிறது. சுய புத்தி இருக்கிறது. அதன் பிரகாரமே நான் செயற்படுவேன். தந்தை சென்ற வழியில் செல்லுமாறா நீங்கள் என்னை கேட்கிறீர்கள் என கேட்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment