(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் ராஜபக்ஷர்களின் ஆட்சிக் கால ஊழல் மோசடிகள் மறக்கப்பட்டுள்ளன. சட்டமூலம் அழகானதாக காணப்பட்டாலும் பல சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. ஆகவே கடந்த காலத்தை உள்ளக்கியதாக சட்டமூலம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊழல் மோசடியால் நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. அவசர கொள்வனவு ஊடாக இறக்குமதி செய்யப்பட்ட மயக்க மருந்து தடுப்பூசி காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தருக்கு அப்பாற்பட்ட வகையில் வெளிநபர்களிடமிருந்து அவசர கொள்வனவு ஊடாக இந்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 3.8 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளன. அவசர மருந்து கொள்னவவை சுகாதார அமைச்சு எப்போது முடிவுக்கு கொண்டு வரும் என்பதை குறிப்பிட முடியவில்லை.
ஆகவே இந்த தடுப்பூசி கொள்வனவு மற்றும் மூவரின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு பாராளுமன்றத்துக்கு உண்மையை அறிவிக்க வேண்டும்.
2022 ஆம் ஆண்டு மதிப்பீட்டுக்கு அமைய உலகில் ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 101 ஆவது இடத்தில் உள்ளது. நாளுக்குநாள் ஊழல் தீவிரமடையும்போது நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சர்வதேச ஒத்துழைப்புகள் தடைப்படும் நடுத்தர மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் அழகானதாக காணப்பட்டாலும் பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. இந்த சட்டத்தின் ஊடாக சீனா கழிவு உர கொள்வனவு மோசடியாளர்கள், கொவிட் தடுப்பூசி மோசடியாளர்கள், இரசாயன திரவ உர கொள்வனவு மோசடியாளர்கள் தண்டிக்கப்படுவார்களா, மறுபுறம் நாட்டின் பாதுகாவலன் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ தண்டிக்கப்படுவாரா?
2004 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்தவர்களின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்களா, ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் கடந்த காலத்தை மறந்துள்ளது. எதிர்காலத்தை மாத்திரம் வரையறுத்துள்ளது. ஆகவே நாட்டு மக்களின் வலியுறுத்தலுக்கு அமைய இந்த சட்டமூலத்தில் கடந்த காலம் உள்ளடக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment