(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நபரின் தனிப்பட்ட அடையாளங்களை ஊடகங்கள் வெளியிடுவது இரண்டு வருட கால சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும். நாட்டில் போதுமான சட்டம் உள்ளது. ஆனால் அவை முறையாக செயற்படுத்தப்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன் என நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா பாலியல் இலஞ்ச குற்றம் தொடர்பில் ஊழல் சட்டமூலத்தில் ஒரு சில முன்னேற்றகரமான ஏற்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட தரப்பினரது தனிப்பட்ட அடையாளங்களை வெளியிடுவது தொடர்பில் விரிவாக ஆராய வேண்டும் என்று குறிப்பிட்டார். இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நபர்கள் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அவதானித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட தரப்பினரின் தனிப்பட்ட அடையாளங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட தரப்பினரது விருப்பம் அல்லது நீதிமன்றத்தின் அனுமதியுடன்தான் அவர்களின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்த முடியும். எவரது அனுமதியும் இல்லாமல் ஊடகங்கள் பாதிக்கப்பட்ட நபரின் தனிப்பட்ட அடையாளங்களை வெளிப்படுத்துவது தண்டனை சட்டக் கோவையின் 365 (சி) பிரிவின் கீழ் இரண்டு வருடகால தண்டனைக்குரிய குற்றமாகும்.
நாட்டில் இவ்வாறான சட்டம் உள்ளது என்பதை எத்தனை ஊடகங்கங்கள் அறிந்துள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. நாட்டில் போதுமான சட்டங்கள் உள்ளன. இருப்பினும் அவை முறையாக செயற்படுத்தப்படுவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment