(எம்.வை.எம்.சியாம்)
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், குருநாகல் மாவட்டத்திலும் கால்நடைகளில் பரவிய தோல் கழலை நோய் பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக அதிகளவான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கால்நடைகளிடையே ஒரு வகையான நோய் பரவ ஆரம்பித்தமை முதன் முதலில் கண்டறியப்பட்டது.
மேலும், திருகோணமலை மாவட்டத்திலும் குறித்த தொற்று நோய் அடையாளம் காணப்பட்டது. பின்னர், வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் தோல் கழலை அறிகுறிகளுடன் கால்நடைகள் அடையாளம் காணப்பட்டன.
இந்த வருடத்தின் மார்ச் ஆரம்பத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவிய தோல் கழலை நோய் பின்னர், யாழ்ப்பாணம், மன்னார் போன்ற பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்பட்ட தோல் கழலை நோய் அண்மையில் குருநாகல் மாவட்டத்திலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்தது. அதற்கமைய, குருநாகல் மாவட்டத்தின் ஹொரம்பாவ, நாரமல்ல, கெகுனுகொல்ல, மெட்டியாவ, மீரயால, பண்டாரகொஸ்வத்தை, வரகாகொட்டுவ உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளிடையே தோல் கழலை நோய் பரவுகின்றமை கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய, பள்ளியகொடல்ல, பம்பரான பகுதிகளிலும் ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியிருந்த தோல் கழலை நோய் மீண்டும் அப்பகுதிகளில் உள்ள மாடுகளிடையே பரவுவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோய் தாக்கத்தால் பொலன்னறுவை மற்றும் திருகோணமலை பகுதிகளில் உள்ள அதிகமான மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பகுதியில் பால் அதிகம் சுரக்கும் கால்நடைகள் காணப்படுகின்றன. இருப்பினும், கால்நடைகளுக்கு இதுவரையில் முறையான தடுப்பூசிகள் எதுவும் வழங்கப்படவில்லை. நாளொன்றுக்கு 500 லீட்டர் பால் சுரக்கும் மாடுகள் தற்போது 100 லீட்டருக்கும் குறைவாகவே பால் சுரக்கின்றன.
மேலும், நோய் தாக்கத்துக்கு உட்பட்ட கால்நடைகள் 15 நாட்களுக்குள் உயிரிழப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
லம்பி டிசீஸ் எனப்படும் தோல் கழலை நோய் கால்நடைகளை பெரிதும் பாதிக்கிறது. இந்த நோய் காரணமாக கால்நடைகளுக்கு காய்ச்சல், உணவில் நாட்டமின்மை, சோர்வு, உமிழ் நீர் வெளியேற்றம், நடப்பதில் சிரமம், கால் கழுத்துப் பகுதிகளில் வீக்கம், கட்டிகள் உடைந்து கொப்பளங்களாக மாறுதல் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுகின்றன.
No comments:
Post a Comment