கடன் நீடிப்பு தொடர்பிலான உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் : அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு வர்த்தக, தொழிற்சங்க பிரதிநிதிகள் பாராட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, June 30, 2023

கடன் நீடிப்பு தொடர்பிலான உண்மைகளை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் : அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு வர்த்தக, தொழிற்சங்க பிரதிநிதிகள் பாராட்டு

கடன் நீடிப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டும் சிறப்புப் பணி வர்த்தக, தொழிற்சங்க குழுவினரை சார்ந்துள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கடன் நீடிப்பு முறைமைகள் பற்றிய உண்மைகளை கூறுவதால் இந்நாட்டின் தொழிற்படையினர், பொது மக்கள் மத்தியில் காணப்படும் அச்சத்தைப் போக்க முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வணிக சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை ஜனாதிபதி அலுவலகத்தில் 29) சந்தித்து கலந்துரையாடியிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வணிக சபையின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள் ஆகியோருடனான சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கடன் நீடிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வட்டி வீதங்கள் குறைவடைவதால் நிதிசார் நடவடிக்கைகளினால் பாதிப்புக்களை எதிர்கொண்டவர்களுக்கு நிவாரணம் கிட்டும் என்றும் தெரிவித்தார்.

வட்டி வீதம் குறைவடையும் காலத்தை உறுதியாக குறிப்பிட முடியாத போதிலும், சில மாதங்களுக்குள் வட்டி வீதங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதனையடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் நீடிப்பை செய்யத் தவறும் பட்சத்தில் சிறிய வியாபாரங்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் மீண்டும் பெருமளவில் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டினார்.

அதேபோல் டொலர் வலுவடைந்து காணப்படும் இதுபோன்ற நேரங்களில் டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்தால் நிலைமை பாரதூரமாகிவிடும் என தெரிவித்த ஜனாதிபதி, வெளிநாட்டு கடன் நீடிப்பை போன்று உள்நாட்டு கடன் நீடிப்பையும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அதேபோல் ஊழியர் சேமலாப நிதியத்தின் பயனாளர்களுக்கு 9% சதவீத வட்டி அவ்வண்ணமே பெற்றுக்கொடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்பதால் எதிர்கால பலன்கள் பற்றிய நம்பிக்கையை இழக்க வேண்டாமெனவும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடத்தில் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசிய கடன் நீடிப்பு செயற்பாடுகளை முன்னெடுக்கும் பட்சத்தில் அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும் எனவும் அதனால் கடந்த காலத்தில் முடங்கிக் கிடந்த நிர்மாணத்துறை உள்ளிட்ட ஏனைய துறைகளின் அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிக்க முடியுமெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார மறுமலர்ச்சியின் ஊடாக பெருமளவான தொழில்வாய்ப்புக்கள் உருவாகும் எனவும் தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, “வங்கிக் கட்டமைப்புக்கு பாதிப்பு ஏற்படக்கூடுமென மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்களினால் மக்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். இருப்பினும் பேச்சுவார்த்தைகளின் போது வங்கிக் கட்டமைப்பின் நிலைத்தன்மை தொடர்பிலேயே அதிக அவதானம் செலுத்தினோம். அடுத்ததாக அனைத்து வங்கி கணக்குகளையும் பாதுகாக்கும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்தோம். வங்கி கட்டமைப்பு தொடர்பில் ஏற்படுத்தப்படும் அநாவசியமான அச்சத்தினால் ஓய்வூதிய நிதியங்கள் போன்ற பெரும் நிதியங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால் நியாயமானதொரு தீர்வினையே நாங்கள் முன்வைத்துள்ளோம்.

வங்கிகள் ஏற்கனவே 50% சதவீத வரியை செலுத்தி கடன் சலுகைகளையும் வழங்குகின்ற அதேநேரம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பங்களிப்பு வழங்குகின்றன. அதன் பலனாகவே வங்கி கட்டமைப்புக்கள், வைப்புக் கணக்குகள் ஆகியவற்றைப் பேணும் நிறுவனங்களின் பிணைமுறிகளை மறுசீரமைப்புச் செய்யாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திறைசேரி கடன் பத்திரங்களுக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாது. திறைசேரி பத்திரங்களை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும். அதேபோல் ஓய்வூதிய நிதியம் தொடர்பிலான நியாயமான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

அதனால் வருடாந்தம் அவற்றுக்கான 9% சதவீத வட்டி வழங்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்த முடியும். தற்போதைய சேமிப்புத் தொகையிலும் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது. அத்தோடு திறைசேரி பிணைமுறிகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய பிணைமுறிகள் பரிமாற்றப்படும். இந்தப் பணிகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளோம். அது தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளதோடு, அன்றிலிருந்து தீர்மானிக்கப்பட்ட இறுதி தினமும் அறிவிக்கப்படும்.

ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் (EPF, ETF) ஆகியவற்றின் எந்தவொரு பிணைமுறியினையும் பரிமாற்றிக்கொள்ள முடியும். தனியார் துறையிலும் பல்வேறு ஓய்வூதிய நிதியங்கள் காணப்படுகின்றன. அவையும் மறுசீரமைக்கப்படும். வங்கித்துறையினர் 50% வரியை திறைசேரிக்கு செலுத்தும் போது அதற்கு இணையாக ஓய்வூதிய நிதியங்கள் 14% வரியை மாத்திரமே செலுத்துகின்றன. மேற்படி பிணைமுறி பரிமாற்றத்தில் அவர்கள் பங்கெடுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 14% வரியை செலுத்துவதற்கான வாய்ப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும். அவ்வாறு இல்லாவிட்டால் கூடிய வரி விகிதங்களுக்கு செல்ல முடியும். அது அவர்களுக்கு பலனற்றதாகும்.

அதனால் மேற்படி விடயங்களை தீர்மானிக்கும் பொறுப்பு ஓய்வூதிய நிதியங்களையே சார்ந்துள்ளது. அந்த தெரிவு யாதென எமக்கு அறிவிப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளோம். அதேநேரம் ஜூலை மாத இறுதிக்குள் பிணைமுறிகள் பரிமாற்றம் நிறைவு செய்யப்படும். அவர்களின் பணப்புழக்கத்தினால் அரசாங்கத்திற்கு பாரிய நிவாரணமொன்று கிட்டும். மேலும் பிணைமுறிகள் பரிமாற்றத்தின் போது 5 வருட சலுகை காலமொன்று வழங்கப்படும் என்பதோடு, கையிருப்பில் உள்ள பிணைமுறிகளுக்கு மாத்திரமே வட்டி வழங்கப்படும். 2032 – 2038 ஆம் ஆண்டில் அதன் காலம் பூர்த்தியாகும். அதன் பின்னர் படிப்படியாக வருடாந்த அடிப்படையில் காலம் பூர்த்தியாகும்.

மத்திய வங்கி என்ற வகையில் நிதி நிலைத் தன்மை, வங்கிக் கணக்குகளின் பாதுகாப்பு என்பனவே எமது தலையீட்டின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது. மறுமுனையில் ஊழியர் சேமலாப நிதியத்தின் பொறுப்பாளராகவும் மத்திய வங்கியே விளங்குகிறது. அந்த வகையில் ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் ஆகியவற்றுக்கான நல்லதொரு நீடிப்புக்கான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதே எமது நோக்கமாகும். இதனை பாராளுமன்றத்தில் சமர்பித்து செயற்குழுவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும்.“ என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தகச் சங்கத்தின் தலைவர் பிங்குமாவல் தேவரத்ன, “தேசிய கடன் நீடிப்பு வேலைத்திட்டத்தில் வங்கிகளை உள்வாங்காமை மகிழ்ச்சியளிக்கிறது. அதனை பார்க்கின்ற போது மேற்படி யோசனையின் ஊடாக மொத்தமான நிதித் தேவை (GFN) என்ற இலக்கினை நோக்கி நகர முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அது தீர்மானமிக்க விடயமாகும்.

மேலும் இந்த விடயத்தை, பணம் வெளியில் செல்லும் என்ற கோணத்தில் பார்க்கப்படும் போதும் பெரும் நிவாரணம் கிட்டுமென தெரிகிறது. வரவு செலவு என்ற அடிப்படையில் பார்க்கின்ற போதிலும் உள்நாட்டு கடன்களுக்கான கடன் வட்டிகளை செலுத்தும் போது அரசாங்கம் சிறந்த கண்காணிப்பை கொண்டுள்ளது என்பதை அவதானிக்க முடிகின்றது.

அதேபோல் அரச வருமானத்தை அதிகரித்துக்கொள்ள அரசாங்கம் மேலும் பல படிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும். தற்போதுள்ள வரியின் அடிப்படையில் எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்வது சாத்தியமற்றதாகும். அதனால் குறிப்பாக வரி பத்திரங்களை அதிகரித்தல் வேண்டும்.“ என்று இலங்கை வர்த்தகச் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை வணிகச் சபையின் தலைவர் விஷ் கோவிந்தசாமி, “வணிகச் சபை என்ற அடிப்படையிலும் தனியார் துறையின் தரப்பில் இருந்தும் கூறுவதாயின் வங்கிக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கு உரித்தான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என நம்புகிறேன். அதனை செய்யத் தவறினால் தற்போதைய நெருக்கடி நிலைமையில் வங்கிக் கட்டமைப்பு சரிவைச் சந்திக்க நேரிடும். மேலும் பல பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க நேரிடும்.

இதனால் வங்கிகள் ஊடாக தனியார் துறைக்கு சலுகை அடிப்படையில் பணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு கிட்டும் எனவும் நம்புகிறேன். இதுவரை காலமும் அவ்வாறு நடக்கவில்லை. எதிர்காலத்தில் அது நடக்குமென எதிர்பார்க்கிறோம். அவ்வாறு நடந்தால் முதலீடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்வோம். 

கடந்த 18 - 24 மாதங்களாக அனைத்துச் செயற்பாடுகளும் முடங்கிக் கிடந்தன. பொருளாதாரம் முன்நோக்கி நகர வேண்டுமெனில் தனியார் துறைக்கு நிதிகள் அவசியப்படுகின்றன.” என்று இலங்கை வணிகச் சபையின் தலைவர் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த ஆடை உற்பத்தி சம்மேளனத்தின் தலைவர் கிராட் அமலீன், “நாட்டிற்குள் காணப்பட்ட நெருக்கடி நிலையை மாற்றியமைத்மைக்கு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். அது மிகப்பெரிய நிவாரணமாகும். நான் மண்டபத்திற்குள் வருகின்றபோது அனைவரும் சிரித்த முகத்துடன் இருந்தனர். 

அதனால் அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு நாங்கள் எவ்வாறு பங்களிப்பினை வழங்க வேண்டும் என்ற கேள்வியே எங்கள் மத்தியில் உள்ளது.” என்று ஒருங்கிணைந்த ஆடை உற்பத்தி சம்மேளனத்தின் தலைவர்

இலங்கை வணிகச் சபையின் பொதுச் செயலாளரும் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான புவனேகபாகு பெரேரா, “தற்போது எம்மால் செலுத்தப்படும் வட்டிக் கொடுப்பனவின் மூலதனத்திற்கு ஓரளவான சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்படும் எனில், முதலீட்டு ஊக்குவிப்பு, தனியார் துறைக்கு அது பெரும் பக்கபலமாக அமையும். 

தற்போதும் சிறிய, நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, மாற்றுத் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக அறிய முடிகிறது. அவர்களை உள்நாட்டில் தக்கவைத்துக் கொள்ள நாம் முயற்சிக்க வேண்டியது அவசியமாகும். அவற்றில் சில நிறுவனங்கள் 30 - 40 வருடங்களாக இந்நாட்டில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவை. அவர்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதும் அவசியமாகின்றது. 

அடுத்த சில மாதங்களில் இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்த வேண்டியது அவசியமாகும். குறைந்தபட்சம் தனியார் துறைகள் சர்வதேச அளவில் போட்டித் தன்மையுடன் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் வகையிலான நிவாரணங்களை வழங்க வேண்டும்.“ என்று இலங்கை வணிகச் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

தொழிற்சங்கத் தலைவர்களும் உறுப்பினர்களும் இங்கு கருத்து தெரிவித்த போது, நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சிகள் தொடர்பில் பாராட்டு தெரிவித்தனர்.

பிரதமர் தினேஸ் குணவர்தன, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சிசிர ஜயகொடி, காமினி லொக்குகே, வடிவேல் சுரேஷ், தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, தேசிய தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment