நிகழ்ச்சியொன்றில், பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக தெரிவித்து, கைது செய்யப்பட்ட நகைச்சுவை கலைஞரான (Standup Comedian) நதாஷா எதிரிசூரியவுக்கு எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நதாஷாவின் கருத்துகள் அடங்கிய குறித்த வீடியோவை வெளியிட்டதாக கைதான 'SL VLOG' எனும் யூடியூப் சனலின் உரிமையாளரான புருனோ திவாகர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 27ஆம் திகதி இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து நதாஷா குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் SL-Vlog உரிமையாளர் புருனோ திவாகர மே 31ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் (21) குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புருனோ திவாகரவை, ரூ. 50,000 ரொக்கம் மற்றும் ஒரு மில்லியன் ரூபா கொண்ட இரு சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது
அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்ததோடு, கடவுச்சீட்டை கையளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
ஆயினும் குறித்த வழக்கின் பிரதான சந்தேகநபரான நதாஷா எதிரிசூரியவை எதிா்வரும் ஜூலை 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அன்றையதினத்திற்கு குறித்த வழக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment