உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் புத்தளம் பகுதியில் இயங்கி வந்த புத்தளம் அல் ஸுஹைரியா மத்ரஸா பாடசாலை மாணவர்களுக்கு வன்முறைகளை தூண்டும் வகையில் விரிவுரைகளை நடத்தியதாக கூறி இரண்டு விரிவுரையாளர்கள் உட்பட நால்வரை சி.ஐ.டி.யினர் தற்போது கைது செய்துள்ளமையானது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான நடவடிக்கைகளை இறுக்குவதற்காக முன்னெடுக்கப்படும் அடிப்படையற்ற செயற்பாடு என பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ரவூப் ஹக்கீம் வாதிட்டார்.
மத்ரஸா மாணவர்களுக்கு யுத்தத்தை தூண்டும் போதனைகளை செய்தமைக்காக எனக்கூறி கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, அனஸ் அன்வர் முகம்மது சுபைர், அப்துல் ஹமீத் ஜாபர் எனும் இரு விரிவுரையாளர்கள் மற்றும் அந்த சந்தர்ப்பத்தில் அவ்விடத்திலிருந்ததாக கூறப்படும் முஹமது அசிபத் அபூபக்கர் சித்தீக், ராவுத்தர் நைனா அஸனார் மரிக்கார் ஆகியோர் குறித்த வழக்கு விசாரணைகள் நேற்று (31) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன்போது 2 ஆவது சந்தேக நபருக்காக மன்றில் ஆஜராகி வாதங்களை முன்வைக்கும்போதே ரவூப் ஹக்கீம் இதனை குறிப்பிட்டார்.
‘இந்த முழு விசாரணை நடவடிக்கையும் இட்டுக்கட்டப்பட்டது. இவர்களின் கைது, சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை நெருக்குதலுக்குள் தள்ளுவதற்காகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சி.ஐ.டி.யினர் மாணவர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெற்றமை தொடர்பில் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட மறுநாள் சட்ட மா அதிபரின் ஆலோசனை எனும் பெயரில் இந்த நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
52 நாள் அரசாங்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தமையே ஹிஜாஸை பழி வாங்குவதற்கான காரணமாகும்’ என ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
நேற்று வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, சி.ஐ.டி. அதிகாரிகள் கடந்த தவணை உத்தரவுக்கு அமைய சாட்சிகளின் சுருக்கத்தை மேலதிக அறிக்கை ஊடாக மன்றில் சமர்பித்தனர். அதில் அல் சுஹைரியா மத்ரஸாவில் கல்வி கற்ற மலிக் எனும் மாணவனின் வாக்குமூலம் காணப்பட்டது.
சி.ஐ.டி.யினருக்காக அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம மன்றில் ஆஜரானதுடன் சந்தேக நபர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், சட்டத்தரணிகளான நளீம், நிரான் அங்கிடெல், வஸீமுல் அக்ரம் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகினர்.
முதலில் விடயங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி கிரிஹாகம, கடந்த தவணை உத்தரவுக்கு அமைய சாட்சி சுருக்கத்தை மன்றில் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.
இதனையடுத்து முதல் சந்தேக நபருக்காக மன்றில் விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரிகுணரத்ன, சாட்சியாளர் எனக் கூறப்படும் மலிக், நீதிவான் ஒருவருக்கு வழங்கிய வாக்குமூலம் உள்ளிட்ட 5 வாக்குமூலங்களை வழங்கியுள்ள நிலையில், 2019 முதல் இதுவரை அவ்வாக்குமூலங்கள் ஊடாக எழாத நியாயமான சந்தேகம் 5 வருடங்களின் பின்னர் எப்படி திடீரென ஏற்பட்டது என கேள்வி எழுப்பினார். எனவே சந்தேக நபர்களை முற்றாக விடுவிக்க வேண்டும் என அவர் வாதிட்டார்.
சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் வாதங்களை முன்வைக்கையில், அல் சுஹைரியா மத்ரசாவில் 40 மாணவர்கள் இருந்த நிலையில், மலிக் எனும் ஒருவரின் வாக்குமூலத்தில் மட்டும் சட்டமா அதிபர் தங்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், ஏனையோரிடம் வாக்குமூலம் பெறப்பாடமல் இருப்பது குறித்து சந்தேகம் எழுப்பினார்.
அத்துடன் அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதில்லை என சர்வதேசத்துக்கு வாக்குறுதி அளித்துவிட்டு, இங்கு அதனை பயன்படுத்துவது இலங்கைக்கு ஜெனீவா மனித உரிமை பேரவை வரையில் பிரச்சினைகளை ஏற்படுத்த வல்லது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் வாதங்களை முன்வைத்த சட்டத்தரணி நிரான் அங்கிடெல், மலிக்கின் வாக்கு மூலங்கள் சட்டமா அதிபரிடம் இருந்த நிலையிலேயே அதனை ஆராய்ந்து புத்தளம் மேல் நீதிமன்றில் இரு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்போது குற்றம் சுமத்தப்படாத தமது சேவை பெறுநர் இப்போது எப்படி சந்தேக நபரானார் என கேள்வி எழுப்பினார்.
தனது சேவை பெறுநரான 80 வயதுடைய ஹசனார் மரிக்கார், அல் சுஹைரியா மத்ரசா நிர்வாக சபை தலைவர் எனவும் அவர் உயர் நீதிமன்றுக்களித்த சத்தியக் கடதாசியில் அல் சுஹைரியாவில் எந்த அடிப்படைவாத நடவடிக்கையும் நடக்கவில்லை என கூறியுள்ள நிலையில், ஆரம்ப சந்தர்ப்பத்தில் அவரை கைது செய்யாது விட்ட சி.ஐ.டி. இப்போது எந்த அடிப்படையில் அவரைக் கைது செய்தது என அவர் கேவி எழுப்பினார்.
மொத்தத்தில் சந்தேக நபர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு சட்டத்தரணிகள் கோரினர். எனினும் அதற்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்மினி ஹிரியாகம கடும் எதிர்ப்பு வெளியிட்டார்.
சந்தேக நபர்களுக்கு எதிராக ஒரு வாரத்துக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட அவர் அதுவரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கோரினார்.
விடயங்களை ஆராய்ந்த நீதிவான் திலின கமகே, ஒரு வாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்களை விடுவிப்பது தொடர்பில் தற்போது உத்தரவொன்றினை பிறப்பிப்பதில்லை எனவும், ஒரு வாரத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தவறினால் சந்தேக நபர்கள் சார்பிலான வாதங்கள் குறித்து ஆராய்வதாகவும் நீதிபதி அறிவித்து வழக்கை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். அதுவரை நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் அறிவித்தார்.
Vidivelli
No comments:
Post a Comment