கபூரியா அரபுக்கல்லூரி அதனைத் தோற்றுவித்தவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் அதன் உறுதியில் கூறப்பட்ட பிரகாரமும் அப்துல்கபூர் அறக்கட்டளையின்படியும் தொடர்ந்து அதன் சேவையினை சமூகத்திற்கு வழங்கும் அதேவேளை அதன் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கல்வியையும் உறுதி செய்யும் என நம்பிக்கையாளர் சபை அறிவித்தல் வெளியிட்டபோதும் நோன்பு கால விடுமுறையில் அனுப்பப்பட்ட 57 மாணவர்கள் இதுவரை கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் வீடுகளிலே இருக்கிறார்கள் என கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.
கபூரியா அரபுக்கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் ஐ.எல்.டில்சாத் மொஹமட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; மே மாத ஆரம்பத்தில் கபூரியா அரபுக்கல்லூரி மாணவர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது என கல்லூரியின் நம்பிக்கையாளர் சபை மக்களின் பார்வைக்கு பொய்யான அறிவித்தலொன்றினையே வெளியிட்டுள்ளது. கல்லூரியின் மாணவர்கள் விடுமுறையின் பின்பு இதுவரை கல்லூரியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. கல்லூரியின் நுழைவாயில் அவர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ரமழான் விடுமுறையின் பின்பு கடந்த மே மாதம் 9 ஆம் திகதி திரும்பி வந்த மாணவர்கள் நிர்வாகத்தினால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்லூரிக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படாததால் மாணவர்களும் பெற்றோரும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் முறைப்பாடுகள் செய்தும் அவை விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள்.
Vidivelli
No comments:
Post a Comment