ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 29, 2023

ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள்

மின்சாரக் கட்டண அதிகரிப்பின் பின்னர் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத குடும்பங்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக, மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் சஞ்ஜீவ தம்மிக்க தெரிவித்தார்.

ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத குடும்பங்களின் எண்ணிக்கை கடந்தாண்டு 3 இலட்சமாக காணப்பட்டதுடன், தற்போது இது 4 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாகஅவர் மேலும் தெரிவித்தபோது, "இலங்கை மின்சார சபை, மின்சாரத்துக்கான கேள்விக்கும் மேலதிகமாக கடந்த 2022ஆம் ஆண்டு ஓகஸ்டிலும் 2023ஆம் ஆண்டு பெப்ரவரியிலும் மின் கட்டணத்தை அதிகரித்தது. 

இது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை முன்வைத்தபோது, அது சாத்தியமற்றதெனத் தெரிவித்து அதனை நிராகரித்தோம். எனினும், எமது குரலுக்கு மின்சார சபை செவி சாய்க்கவில்லை. தற்போது தாம் செய்தது தவறென்று உணர்ந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டண அதிகரிப்பால், மின் பாவனையாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததுடன், மின் நுகர்வு 20 சதவீதத்தால் குறைவடைந்தது.

அப்போது, ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 3 இலட்சம் குடும்பங்கள் இருந்தன. அந்த எண்ணிக்கை தற்போது 4 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை மின்சார சபைக்கே தற்போது கணிசமான நட்டம் ஏற்பட்டுள்ளது. அதனாலேயே, மின் கட்டண அதிகரிப்பை நாம் எதிர்த்தோம்.

முன்மொழியப்பட்ட கட்டண திருத்தத்தை அங்கீகரிப்பதில், மின் நுகர்வோர் மற்றும் பல்வேறு தொடர்புடைய தரப்பினரால் முன்வைக்கப்படும் நியாயத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கருத்திற்கொள்ள வேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment