O/L பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி : வினாத்தாள் விநியோகம் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 27, 2023

O/L பரீட்சைக்கான ஏற்பாடுகள் பூர்த்தி : வினாத்தாள் விநியோகம் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் (2022 ஆம் ஆண்டுக்கான) திங்கட்கிழமை (29) ஆரம்பமாகவுள்ளன.

கடந்த 2020ஆம் ஆண்டு கொவிட் தொற்று ஏற்பட்டமையால் அந்த ஆண்டிலிருந்து தேசிய பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்த முடியாத நிலைமை காணப்படுகிறது.

தற்போது ஒவ்வொரு ஆண்டுக்குமுரிய பரீட்சைகள் கட்டம் கட்டமாக நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், கடந்த ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.

அதற்கமைய இம்முறை நாடளாவிய ரீதியில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். பாடசாலைகள் மூலம் 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் தோற்றவுள்ளனர். இதற்காக 3,568 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான வினாத்தாள்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பரீட்சை நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்கு தேவையான வினாத்தாள்கள் பரீட்சை நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணி புரிகின்றனர்.

விசேட தேவையுள்ள மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சிறைக் கைதிகளுக்காக பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

அதேபோன்று, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகள் இருப்பின் அவர்கள் மருத்துவ நிபுணரின் ஆலோசனையின் பேரில் அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெற உடலை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிந்து பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பரீட்சார்த்திகளின் போக்குவரத்து வசதிகளுக்காக மாணவர்களுக்கான பஸ் சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வார இறுதி நாட்களில் பரீட்சை நடைபெறுகின்றபோது, வார நாட்களில் முன்னெடுப்பது போன்று ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை முதல் ஜூன் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன் காரணமாக சகல அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 12ஆம் திகதி முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment