பாராளுமன்றத்தில் விவாதிப்பது சட்டவிரோதமானது : பொறுப்பை சபாநாயகர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்க வேண்டும் - விஜயதாஸ ராஜபக்ஷ - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 9, 2023

பாராளுமன்றத்தில் விவாதிப்பது சட்டவிரோதமானது : பொறுப்பை சபாநாயகர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்க வேண்டும் - விஜயதாஸ ராஜபக்ஷ

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் இடம்பெறுவது சட்டவிரோதமானது. 6.4 பில்லியன் டொலர் நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதன் பொறுப்பை சபாநாயகர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் ஏற்க வேண்டும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி நடவடிக்கைகள் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளாகி கடல் வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நியூ டைமன் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்கள் தொடர்பில் கடந்த மாதம் 25 ஆம் திகதி நான் சபையில் ஆற்றிய உரை தொடர்பில் அரசியல் களத்தில் மாறுபட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகிறது.

குவைட் நாட்டில் இருந்து இந்தியா நோக்கி பயணம் செய்த நியூ டைமன் கப்பல் 2020.09.03 ஆம் திகதி நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளானது. இந்த கப்பலில் 27 ஆயிரம் கொள்கலன்கள் காணப்பட்டதுடன், கொள்கலன்களில் எரிபொருள்கள் சேமிக்கப்பட்டிந்தது.

இந்த கப்பல் விபத்து தொடர்பில் கப்பலின் கேப்டனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து 2020.09.11 ஆம் திகதி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கப்பலை நாட்டின் கடற்பரப்பில் இருந்து வெளியேற்ற பல்வேறு தரப்பினர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டார்கள்.

விபத்தினால் கடல் வழங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முழுமையாக மதிப்பீடு செய்யாமல் கப்பலை நாட்டின் கடல் எல்லையில் இருந்து வெளியேற்ற வேண்டாம் என அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய தரப்பினருக்கு தெளிவாக அறிவுறுத்தினார்.

முழுமையான மதிப்பீடு இல்லாமல் கப்பலை வெளியேற்ற வேண்டாம் என சட்டமா அதிபர் கடற்படை தளபதி, கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு பலமுறை வலியுறுத்தியுள்ள நிலையில் கப்பலை வெளியேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக வெளிவிவகாரத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜயநாத் கொலம்பகே கடற்படைத் தளபதி, கடல் வளங்கள் பாதுகாப்பு அதிகார சபை தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் ஊடாக அறிவுறுத்தியுள்ளார். இதன் பின்னரே கப்பல் வெளியேற்றப்பட்டது.

முழுமையான மதிப்பீடு இல்லாமல் கப்பலை வெளியேற்றியதால் வழக்கு நடவடிக்கைகளுக்கு உரிய தரப்பினர் பங்குப்பற்றுவதில்லை. கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 443 மில்லியன் டொலர் மாத்திரமே நட்டஈடு கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த கப்பல் விவகாரத்தில் ஒரு தரப்பினருக்கு 5 மில்லியன் டொலர் இலங்கையில் உள்ள தனியார் வங்கி ஊடாக இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார். ஆகவே இவ்விடயம் தொடர்பில் அவர் முறையாக சி.ஐ.டி.யில் முறைப்பாடளிக்க வேண்டும்.

நாட்டின் கடற்பரப்பில் 2021.05.20 ஆம் திகதி தீ விபத்துக்கு உள்ளாகி அதே ஆண்டு ஜூன் மாதம் கடலில் மூழ்கிய எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் பல விடயங்களை பாராளுமன்றத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன். இந்த கப்பல் விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு 6.4 பில்லியன் டொலர் நட்டஈடு பெற்றுக் கொள்ள முடியும் என 40 பேர் அடங்கிய துறைசார் நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

சர்வதேச சட்டத்துக்கு அமைய கப்பல் நிறுவனத்துக்கு எதிராக சிங்கப்பூர் நாட்டின் வணிக மேல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 25 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 6.4 பில்லியன் டொலர் நட்டஈடு பெற்றுக் கொள்வது சாதாரணதொரு விடயமல்ல. இவ்விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிநாட்டு சட்ட நிறுவனத்தின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டுள்ளது.

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தை கொண்டு வழக்கு தாக்கல் செய்வதை ஒரு தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து தடுத்து வருகிறார்கள். பொறுப்புடன் செயற்பட வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் கூட பொறுப்பற்ற வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

இந்த கப்பல் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெறவுள்ளது. இது முற்றிலும் சட்டவிரோதமானது. பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் 36 (இ) பிரிவில் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள ஒரு விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துரைப்பது அல்லது அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது முறையற்றது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே நட்டஈடு கோரி சிங்கப்பூர் நாட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விவகாரம் தொடர்பில் எவ்வாறு பாராளுமன்றத்தில் உரையாற்ற முடியும். பாராளுமன்றத்தின் கோட்பாட்டை ,பாராளுமன்றம் மீற முடியுமா ?

எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு, நட்டஈட்டை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டால் அதன் பொறுப்பை சபாநாயகர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment