நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 9, 2023

நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளால் பாராளுமன்ற உறுப்பினரொருவர் கொல்லப்பட்டமை மற்றும் மேலும் பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வன்முறைகள் இடம்பெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையிலேயே பாதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் உள்ளிட்ட ஏனைய மக்கள் பிரதிநிதிகளுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக இவ்வாறு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (09) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த ஆண்டு இதே நாள் உலக வரலாற்றில் ஜனநாயகத்திற்கு கரும்புள்ளியை ஏற்படுத்திய நாளாகும். அரசியலமைப்பு சபை, நிறைவேற்றதிகாரம், நீதிமன்றம் ஆகிய மூன்றும் ஜனநாயக நாட்டில் பிரதான அம்சங்களாகும்.

இவற்றுக்கு அப்பால் கடந்த ஆண்டு மே 9ஆம் திகதி திட்டமிட்ட வகையில் நாட்டில் வன்முறைகள் இடம்பெற்றன. இதன் விளைவாக பாராளுமன்ற உறுப்பினரொருவர் கொல்லப்பட்டதோடு மாத்திரமின்றி, 12 மணித்தியாலங்களுக்குள் 72 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அது மாத்திரமின்றி பிரதேச சபைகள் உள்ளிட்டவற்றின் 800 மக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

உலக வரலாற்றில் இவ்வாறானதொரு நிலைமை இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படவில்லை. எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனியொரு சந்தர்ப்பத்தில் நாட்டில் பதிவாகாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மே 9 வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகளை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு எதிரான முழுமையான அதிகாரம் கொண்டதாக குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு காணப்பட வேண்டும் என்ற யோசனையையும் முன்வைத்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment