(எம்.மனோசித்ரா)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து பயணிக்க வேண்டும். நான் அமைச்சுப் பதவி குறித்து ஜனாதிபதியிடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது பெருந்தோட்டத்தில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்தப் பிரச்சினைகளை முன்வைத்து கடந்த முதலாம் திகதி விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் துயரங்களை நன்று அறிந்தவர் என்ற ரீதியில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி உறுதிப்படுத்துவார் என்று நம்புகின்றேன்.
நான் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கின்றேனா என்பதை விட, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகின்றேன். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய அரசியலில் அவதானம் செலுத்த வேண்டும்.
ஆனால் அமைச்சுப் பதவி குறித்து நான் ஜனாதிபதியுடன் எந்த பேச்சுவார்த்தையையும் முன்னெடுக்கவில்லை. எனக்கு அமைச்சுப் பதவியை வழங்குவதை விட, எனது மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்த தீர்வினை வழங்குவதே போதுமானது. மக்கள் பிரதிநிதி என்ற ரீதியில் எனக்கும் பொறுப்புக்கள் காணப்படுகின்றன.
இணைந்து பயணிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பினை ஏற்று அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்பதையே நான் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமும் வலியுறுத்துகின்றேன்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார்.
No comments:
Post a Comment