ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள் : கடன் பெறல், தேசிய வளங்களை விற்றலே பொருளாதார கொள்கையாக காணப்படுகிறது - உதய கம்மன்பில - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 17, 2023

ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் ஒன்றிணைவார்கள் : கடன் பெறல், தேசிய வளங்களை விற்றலே பொருளாதார கொள்கையாக காணப்படுகிறது - உதய கம்மன்பில

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைவார்கள் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற இலங்கை மேலவை கூட்டணி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முறையான திட்டங்கள் ஏதும் இதுவரை செயற்படுத்தவில்லை. கடன் பெறல், தேசிய வளங்களை விற்றல் ஆகியவையே ஜனாதிபதியின் பொருளாதார கொள்கையாக காணப்படுகிறது. அரசாங்கத்தின் சிறந்த திட்டமிடலினால் வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கடன் தொகை கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து வெளிநாட்டு கையிருப்பு தற்காலிகமாக ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெற்றுக் கொண்டுள்ள கடன் அடுத்த ஆண்டு தாக்கம் செலுத்தும் என்பதை நாட்டு மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டார் என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவித்து, அதனை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள ஆளும் தரப்பினர்கள் முயற்சிக்கிறார்கள்.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்கு பின்னரே ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தற்போது உள்ள மக்கள் செல்வாக்கு மாற்றமடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ராஜபக்ஷர்களுடன் முறையற்ற நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து வெளியேறினோம். தற்போதும் ராஜபக்ஷர்களின் அரசாங்கம்தான் உள்ளது. எமது தரப்பினர் எவரும் அரசாங்கத்துடன் ஒன்றிணையப் போவதில்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வார்கள். அமைச்சுப் பதவிகள் இல்லாமல் ஒருசிலருக்கு நித்திரை கூட வராது என்றார்.

No comments:

Post a Comment