புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும் தரப்பினரே போராட்டக்களத்தில் முன்னிலை வகித்தவர்கள் - எஸ்.எம்.சந்திரசேன - News View

About Us

About Us

Breaking

Monday, May 29, 2023

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடையும் தரப்பினரே போராட்டக்களத்தில் முன்னிலை வகித்தவர்கள் - எஸ்.எம்.சந்திரசேன

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம். கட்சியை வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் பிரசாரக் கூட்டங்களை முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பொதுஜன பெரமுனவை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்க மக்கள் விடுதலை முன்னணி எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

காலி முகத்தில் போராட்டக்களத்தில் எவ்வாறானவர்கள் முன்னிலை வகித்தார்கள் என்பதை நாட்டு மக்கள் தற்போது விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

புத்தசாசனத்தை அவமதித்து சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரபல்யமடையும் தரப்பினரே போராட்டக்களத்தில் முன்னிலை வகித்தார்கள்.

காலி முகத்திடல் போராட்டககளத்தின் பெறுபேறு தற்போது வெளியாகுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியினர் புத்தசாசனத்தையும் அரசியலமைப்பையும் மதிப்பதில்லை.

ஆகவே நாட்டு மக்கள் ஒருபோதும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்கமாட்டார்கள்.

அரசியலமைப்பின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்குவார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்குவார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் அல்லது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொள்பவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்போம்.

பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி கட்சியை வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றார்.

No comments:

Post a Comment