இலங்கையை மீள வகைப்படுத்துங்கள் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ள அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Friday, May 5, 2023

இலங்கையை மீள வகைப்படுத்துங்கள் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ள அலி சப்ரி

(நா.தனுஜா)

நிதிசார் வசதிகளை இலகுவாக அணுகுவதற்கு ஏதுவான முறையில் இலங்கையை மீள வகைப்படுத்துமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவர் ஷிக்ஸின் சென்னிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் கொரியாவின் இன்ஸியான் நகரில் கடந்த 2 - 5 ஆம் திகதி வரை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 56 ஆவது வருடாந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அங்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் முக்கியஸ்த்தர்கள் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்தின்போது அவ்வங்கியின் பிரதித் தலைவர் ஷிக்ஸின் சென்னை சந்தித்துக் கலந்துரையாடுகையிலேயே அமைச்சர் அலி சப்ரி மேற்குறிப்பிட்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்துத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர் அலி சப்ரி, 'நிதிசார் வசதிகளை மேலும் இலகுவாக அணுகுவதற்கு வாய்ப்பேற்படுத்தக் கூடியவாறு இலங்கையை மீள வகைப்படுத்துமாறு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதித் தலைவரிடம் கேட்டுக் கொண்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்கு உதவும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியானது சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொள்கைசார் கடனுதவியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment