மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு : டெங்கு 3 வைரஸ் ஏற்பட்டால், பாதுகாத்துக் கொள்வது மிகக் கடினம் - News View

About Us

About Us

Breaking

Friday, May 5, 2023

மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு : டெங்கு 3 வைரஸ் ஏற்பட்டால், பாதுகாத்துக் கொள்வது மிகக் கடினம்

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 24 சதவீதமானோருக்கு மாத்திரமே டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாண்டு 'டெங்கு 3 வைரஸ்' பரவ ஆரம்பித்துள்ளமையானது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையை பாரியளவில் அதிகரிக்கச் செய்யக்கூடும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூட நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

கடந்த 6 வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமை தொடர்பில் வினவியபோது இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய டெங்கு 1, டெங்கு 2, டெங்கு 3 மற்றும் டெங்கு 4 என்ற வைரஸ்களால் டெங்கு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே நபரொருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் டெங்கு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

இலங்கையில் மே - ஜூலை காலப்பகுதியில் டெங்கு நோய் அதிகளவில் பதிவாகும். 2016ஆம் ஆண்டு டெங்கு 1 வைரஸால் டெங்கு நோய் இனங்காணப்பட்டதன் பின்னர் வழமைக்கு மாறாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்.

அதன் பின்னர், டெங்கு 2 வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக 2017 இல் வைத்தியசாலை கட்டமைப்புக்கள் நெருக்கடிக்குள்ளாகும் வகையில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கொவிட் தொற்றின் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உள்ளிட்டவற்றால் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படும் வீதம் குறைவடைந்தது. எவ்வாறிருப்பினும், கடந்த ஜனவரி முதல் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

இதற்கான காரணம் குறித்து அறிவதற்காக எமது ஆய்வு கூடத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் டெங்கு 3 வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக பாரியளவில் அதிகரிக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதார அமைச்சுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் 9 மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் 9 மாவட்டங்களில் உள்ள 145 பாடசாலைகளில் 5208 மாணவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு காணப்படுகிறது என்பதை அறிவதற்காகவே இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் எதிர்ப்பு சக்தியுடைய மாணவர்கள் 54 சதவீதமானோர் காணப்படுகின்றனர். நாடளாவிய ரீதியில் அவதானிக்கும்போது 24.9 சதவீதமான மாணவர்களுக்கு மாத்திரமே டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகிறது.

டெங்கு நோய்க்கான தடுப்பூசி வழங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வுகளின் நிறைவில் அந்த தரவுகள் முக்கியத்துவம் பெறும்.

டெங்கு 3 வைரஸால் டெங்கு நோய் ஏற்பட்டால் அதிலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்வது மிகக் கடினமாகும். எனவே, டெங்கு நுளம்பு பரவாத வகையில் சூழலை தூய்மையாக பேணுவதே அடிப்படை தேவையாகும் என்றார்.

No comments:

Post a Comment