வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : கற்றவர்கள் என்ற ரீதியில் புரிந்து கொள்ள வேண்டும் - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 16, 2023

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை : கற்றவர்கள் என்ற ரீதியில் புரிந்து கொள்ள வேண்டும் - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இனியும் இடமளிக்க முடியாது. எனவே புகையிரத தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையின்போது, இனி வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டால் அவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிப்பேன் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்தனவுடனான பேச்சுவார்த்தை வெற்றியளிக்காவிட்டால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று புகையிரத தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், புகையிரத தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படமாட்டாது என இதற்கு முன்னர் உறுதியளித்திருந்தது.

இவ்வாறான வேலை நிறுத்தங்களை நிர்வகித்த சில குறுகிய நோக்கம் கொண்டவர்கள் புகையிரத திணைக்களத்தின் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

அதேபோன்று புகையிரத திணைக்களம் சார்ந்த நியமனங்கள் அமைச்சர்களின் தேவைக்கேற்பவோ, அரசியல் தேவைகளுக்காகவோ வழங்கப்படுபவை அல்ல. அவ்வாறு செய்யப்படுவதும் இல்லை. இது அரசாங்கத்தின் திணைக்களமொன்றாகும். எனவே அரசியலமைப்பு பேரவையினால் வழங்கப்படும் நியமனத்தை என்னால் அரசியல் ரீதியில் மாற்ற முடியாது.

கற்ற சமூகத்தினர் என்ற ரீதியில் தொழிற்சங்கத் தலைவர்கள் இதனைப்புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே அரச சேவைக்கென பிரத்தியேக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே இதனைப் புரிந்து கொள்ளாமல் குண்டர்களைப்போன்று செயற்பட்டு மக்களுக்கு சேவைகளை வழங்காவிட்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

புகையிரத ஊழியர்கள் தொடர்ச்சியாக இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள் எனில், அதனை தனியார் மயப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு தற்போது சமூகத்தில் பரவலாகக் காணப்படுகிறது.

தனிப்பட்ட ரீதியில் நான் அதை விரும்பவில்லை. புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவதன் ஊடாக இலாபமீட்டும் அரச நிறுவனமாகவும், மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் இதனை மாற்றியமைக்க முடியும்.

எனவே புகையிரத போக்குவரத்தினை தினமும் பயன்படுத்தும் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாமல் எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

அதேவேளை, இனிமேல் வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பதை பேச்சுவார்த்தையின்போது நான் அவர்களுக்கு தெரிவிப்பேன் என்றார்.

No comments:

Post a Comment