சுவீகரிக்கப்பட்ட வேகாமம் காணிகள் விரைவில் வழங்கப்படும் : துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட முஷாரப் எம்பி - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 16, 2023

சுவீகரிக்கப்பட்ட வேகாமம் காணிகள் விரைவில் வழங்கப்படும் : துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட முஷாரப் எம்பி

1956ஆம் ஆண்டு நடுத்தர வகுப்பாருக்கென அரசாங்கத்தினால் பொத்துவில் வேகாமம் வட்டையில் வழங்கப்பட்ட சுமார் 1090 ஏக்கர் காணிகள், 2006ஆம் ஆண்டு திடீரென வர்த்தமானி அறிவித்தல் மூலம் வன விலங்கு பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1956 தொடக்கம் யுத்த காலம் உச்சம் கொடுக்கும் வரையிலும் தொடர்ந்து பயிர் செய்து வந்த விவசாயிகள், யுத்தம் நிறைவுற்றதும் பயிர் செய்ய சென்றபோது கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

இது குறித்து விவசாயிகள் அப்போதைய அரசியல் தலைவர்களிடம் தெரிவித்தும் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் வேகாமம் காணி பிரச்சினை கிடப்பில் கிடந்த நிலையில், சட்டத்தரணி முஷாரப் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முதல் இந்த விவகாரத்தை விவசாயிகளோடு கலந்தாலோசித்து சட்ட ரீதியாக அணுகியதோடு, பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதிலிருந்து அரசியல் ரீதியாக தீர்வு பெற்றுக் கொடுக்க தொடர்ச்சியான பணிகளை செய்து வந்தார்.

இந்நிலையில், நாட்டிலேற்பட்ட கொரோனோ பெருந்தொற்று, அதையொட்டிய கட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடி, ஆட்சிக்கவிழ்ப்பு உள்ளிட்ட விடயங்கள் மற்றும் முக்கியமாக குறித்த காணிப் பிரச்சினைகளை கையாளும் அமைச்சு மாறிமாறி வெவ்வேறு அமைச்சர்களிடம் கைமாறப்பட்டு வந்தமை இப்பிரச்சினையின் தொடர்ச்சி தன்மையை தாமதப்படுத்தின.
இருந்தபோதும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்பின் தொடர்ச்சியான அழுத்தம், அதிகாரிகள் அமைச்சர்களுடனான கலந்துரையாடல்கள், பாராளுமன்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்க வைத்தமை உள்ளிட்ட பணிகளால், இன்று (2023.05.16) குறித்த காணிகளை விடுவிப்பு செய்வதற்காக, குறிப்பாக LRRC ஆணைக்குழுவின் பரிந்துரையான 450 ஏக்கர் காணிகளை விடுவிப்பு செய்வதற்காக, வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோரின் பணிப்புரைக்கமைய அம்பாறை - மட்டக்களப்பு வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் இன்று வேகாமம் வட்டை காணிக்கு கள விஜயத்தை மேற்கொண்டு விடுவிக்கப்பட ஏதுவான 450 ஏக்கர் காணிகளை அடையாளப்படுத்தினர்.

இவ்விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் களத்தில் நின்று வரைபடங்களோடு காணிகளை விவரணம் செய்து அடையாளப்படுத்துவதற்கான ஒத்தாசைகளை நல்கினார்.

இன்னும் ஓரிரு தினங்களுக்குள் குறித்த எல்லைப்படுத்தப்பட்ட காணிகள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். அவை மீள் நில அளவை செய்யப்பட்டு வன விலங்கு பூங்காவிலிருந்து விடுபட்டு புதிய வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தொடர்ச்சியான பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த பாராளுமன்ற உறுப்பினருக்கும், விஜயம் செய்த அதிகாரிகளுக்கும் அவ்விடத்தில் பிரசன்னமாகிய விவசாயிகள் நன்றிகளை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment