பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 13 முதல் 100 நாட்களுக்கு நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் 3ஆவது மின்பிறப்பாக்கி செயலிழக்கச் செய்யப்படும் எனவும் ஏனைய மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி தடையின்றி மின் விநியோகம் இடம்பெறும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திட்டமிட்ட வகையிலான குறித்த பாரிய பராமரிப்புப் பணிகளுக்காகவே இவ்வாறு 100 நாட்களுக்கு குறித்த தொகுதி மூடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது 30ஆவது நிலக்கரி சரக்கு கப்பல் நுரைச்சோலையில் இறக்கப்படுவதாகவும், இதன் மூலம் இப்பருவத்திற்கான மின்சார சபையின் முழு நிலக்கரித் தேவையும் பூர்த்தியாவதாகவும் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் இருளடையும் அல்லது மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மின்சார சபை தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவித்த வகையிலான விடயங்கள் இடம்பெறாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஜூலை 01 ஆம் திகதி மின்சார கட்டண திருத்தத்திற்கான இலங்கை மின்சார சபையின் (CEB) முன்மொழிவு இன்று பிற்பகல் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி 01 மற்றும் ஜூலை 01 ஆகிய திகதிகளில் வருடத்திற்கு இரு முறை கட்டணங்களை திருத்தும், அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் கட்டண திருத்தத்தின் தேவைகளின் அடிப்படையில் மின்சார சபை இம்முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறைந்த நுகர்வு பயனர்களுக்கு உச்சபட்ச நன்மையை வழங்கவும், மின்னுற்பத்தி தொடர்பான சரியான தரவு, உண்மையான செலவு, 2023 இற்கான மின்னுற்பத்தி எதிர்வுகூறல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இக்கட்டண திருத்த முன்மொழிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான இலங்கை மின்சார சபையினால் திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணி விபரம் வருமாறு
No comments:
Post a Comment