வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. அதற்கமைய புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) நியமிக்கப்படவுள்ளதாக, ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், வட மேல் மாகாண ஆளுநர் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, வடமேல், சப்ரகமுவ, ஊவா மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தம்மை பதவி விலகுமாறு ஜனாதிபதியோ அல்லது ஜனாதிபதி செயலகமோ இதுவரை எழுத்துமூலம் அறிவிக்கவில்லை என ஆளுநர்களில் பலர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில், சப்ரகமுவ ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ ஆகியோர் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியொருவர் பதவி விலகும்போது ஆளுநர்களும் பதவி விலகுவது வழக்கமான விடயம் எனவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகி, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு பல மாதங்களாகியுள்ள நிலையில் இதுவரை ஆளுநர்கள் பதவி விலகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய, ஆளுநர்களை நியமிக்க முடியும் என்பதோடு, தற்போது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட சிலருக்கு குறித்த ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment