வடக்கு, கிழக்கில் ஆதரவு வழங்கிவிட்டு தெற்கில் பௌத்த பற்றாளர் போல் செயற்படுகிறார் : விமல் வீரவன்ச - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 16, 2023

வடக்கு, கிழக்கில் ஆதரவு வழங்கிவிட்டு தெற்கில் பௌத்த பற்றாளர் போல் செயற்படுகிறார் : விமல் வீரவன்ச

(இராஜதுரை ஹஷான்)

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை அரசியல் கட்சிகளின் கைபொம்மையாக செயற்படுகிறார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிவிட்டு தெற்கில் பௌத்த பற்றாளர் போல் செயற்படுகிறார் என தேசிய சுதந்திர முன்னணியில் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் திங்கட்கிழமை (15) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் செய்கிறார்.

கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டார். நாட்டு மக்கள் ஒருபோதும் இவரை அரச தலைவராக தெரிவு செய்யமாட்டார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுகிறார். இதற்காக அவர் சிறுபான்மை அரசியல் கட்சிகளின் கைபொம்மையாக செயற்படுகிறார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதத்துக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க ஆதரவு வழங்கி விட்டு தெற்கில் பௌத்த பற்றாளர் போல் செயற்படுகிறார்.

மகாவலி அதிகார சபையை இரத்து செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். மகாவலி அதிகார சபையை இரத்து செய்தால் அதன் பொறுப்பாக்கத்தில் உள்ள அரச காணிகள் பிரதேச சபைகளுக்கு உரித்தாகும். அவ்வாறான நிலை ஏற்பட்டால் பிரதேச சபை அதிகாரிகள் தமக்கு இணக்கமானவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்துக் கொள்வார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் இதனையே எதிர்பார்க்கிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment