(எம்.ஆர்.எம்.வசீம்)
நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் அளவுக்கு அதில் உண்மையில்லை. தொற்றாளர்கள் இனம் காணப்பட்டாலும் அது எச்சரிக்கையான நிலை என தெரிவிக்க முடியாது. என்றாலும் கொவிட் தொற்று இன்னும் முழுமையாக உலகில் இருந்து நீங்கவில்லை என்பதால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் வியாழக்கிழமை (04) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கொவிட் தொற்று 2019 இல் உலகளாவிய ரீதியில் பரவிய தொற்று நாேயாகும். இது இன்னும் முற்றாக உலகில் இருந்து இல்லாமல் போகவில்லை. என்றாலும் நாடு என்ற வகையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.
2021 ஆரம்பத்தில் எமது நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் நாளாந்தம் 6 ஆயிரம் பேர் வரை தொற்றுக்குள்ளாகி வந்தனர். என்றாலும் குறித்த வருட இறுதியாகும்போது அதனை 5 பேர் வரை குறைத்துக் கொள்ள முடியுமாகியது. 2022 பெப்ரவரியாகும் போது நாளாந்தம் 20 பேர் வரையே தொற்றுக்குள்ளாகி வந்தனர்.
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முறையாக மேற்கொண்டதாலே அதனை எமக்கு கட்டுப்படுத்திக் கொள்ள முடியுமாகியது.
அத்துடன் நாட்டின் மொத்த சனத் தொகையில் 70 வீதமானவர்கள் கொவிட் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளனர். அதனால் கொவிட் மரணங்களையும் தற்போது எமக்கு குறைக்க முடியுமாகி இருந்தது.
தற்போதும் வாரத்துக்கு இரண்டு அல்லது 3 கொவிட் மரணங்கள் இடம்பெறும் நிலையே இருந்து வருகிறது. உலகளாவிய ரீதியில் பார்க்கும்போதும் கொவிட் எச்சரிக்கை இன்னும் முற்றாக நீங்கவில்லை. என்றாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோன்று கொவிட் தொற்றாளர்கள் இனம் காண்பது முற்றாக நீங்கவில்லை. எமது நாட்டிலும் ஒரு சில மாதங்களில் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப தொற்றாளர்கள் இனம் காணும் எண்ணிக்கை கூடும் குறையும் வகையில் இருக்கிறது.
கடந்த இரண்டு வாரங்களில் 6, 7 பேர் வரை தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்தனர். என்றாலும் இது ஆபத்தான நிலை என தெரிவிக்க முடியாது. இருந்தபோதும் தொடர்ந்தும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி வர வேண்டும்.
குறிப்பாக இந்த காலப்பகுதியில் இருமல், தடிமல் நாேய் அதிகரித்து காணப்படுகிறது. அதற்காக கொவிட் என தீர்மானிக்க முடியாது. இருந்தபோதும் சமுக பொறுப்பு என்ற வகையில் இவ்வாறான நோயுடையவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ளல், சன நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றே மக்களை கேட்டுக் கொள்கிறோம்.
அதேபோன்று கொவிட் மரணம் கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்திருப்பதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவ்வாறு எதுவும் இல்லை. சாதாரணமாக வேறு நோய்களுக்குள்ளாகி அவர்களுக்கு கொவிட் நிலையும் ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மரணங்களே இடம்பெற்றிருக்கின்றன.
அத்துடன் கொவிட் தொற்றாளர்கள் என வைத்தியசாலைகளிலில் அனுமதிக்கப்படும் நிலையும் இதுவரை அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்படவில்லை. அதனால் இது தொடர்பாக வீணாக மக்கள் அச்சப்படத் தேவையில்லை. என்றாலும் மக்கள் எப்போதும் சுகாதார வழிகாட்டில்களை பேணிவந்தால் இவ்வாறான நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.
No comments:
Post a Comment