(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றினை இன்புளுவன்சா வைரஸ் நோய் நிலைமையிலிருந்து வேறுபடுத்தி கண்டறிய முடியாது. எனவே தற்போது காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியது அத்தியாவசியமாகும் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் வின்யா எஸ்.ஆரியரத்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள இலங்கை மருத்துவ சங்கத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. இவ்வாண்டில் இதுவரையில் 30000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே காணப்படுகின்றனர்.
எனவே காய்ச்சல் போன்ற நிலைமைகள் ஏற்படும்போது உடனடியாக வைத்தியர்களை நாட வேண்டியது அவசியமாகும்.
இதேவேளை கடந்த ஓரிரு வாரங்களாக கொவிட் தொற்றாளர்களும் இனங்காணப்பட்டு வருகின்றனர். ஆசிய நாடுகளான இந்தோனேசியா, வியட்நாம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர். எனினும் இந்த நிலைமை குறித்து நாம் வீண் அச்சமடையத் தேவையில்லை.
எவ்வாறிருப்பினும் கொவிட் காலத்தில் பின்பற்றிய சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பேணுவதே ஆரோக்கியமானதாகும். குறிப்பாக நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் முதியோர் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.
இதேபோன்று தற்போது எலிக் காய்ச்சல் பரவும் வீதமும் அதிகரித்து வருகிறது. பற்றீரியாவினூடாகவே எலிக் காய்ச்சல் பரவுகின்றது. விலங்குகளின் சிறுநீரிலிருந்து இந்த பற்றீரியாக்கள் பரவுகின்றன. வயல் போன்ற பகுதிகளிலேயே குறித்த பற்றீரியாக்கள் அதிகளவில் பரவி காணப்படும்.
இதனால் ஏற்படக்கூடிய எலிக் காய்ச்சல் தீவிரமடைந்து மரணம்கூட சம்பவிக்கக் கூடும். மார்ச் தொடக்கம் மே மாதம் வரை பெரும்போக நெற் செய்கைக் காலம் என்பதால் விவசாய சமூகத்தினர் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
காய்ச்சல், கண் சிவத்தல், தசை வலி, மஞ்சள் நிறத்தில் சிறுநீர் செல்லல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் தாமதமின்றி வைத்தியர்களை நாட வேண்டும்.
இந்த நோய் இரத்தினபுரி, காலி, மாத்தறை மாவட்டங்களிலேயே அதிகளவில் பதிவாகியுள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள மக்கள் தமது சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment