ஜெரொம் பெர்னாண்டோவின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் : இதன் பின்னனியிலுள்ள சூழ்ச்சி என்ன என்பதை வெளிப்படுத்துவது அவசியம் - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Friday, May 19, 2023

ஜெரொம் பெர்னாண்டோவின் கருத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம் : இதன் பின்னனியிலுள்ள சூழ்ச்சி என்ன என்பதை வெளிப்படுத்துவது அவசியம் - எதிர்க்கட்சித் தலைவர்

(எம்.மனோசித்ரா)

மத போதகர் என அறியப்படும் ஜெரொம் பெர்னாண்டோ என்ற நபர் அண்மையில் தெரிவித்த பொறுப்பற்றதும் அவமரியாதையானதுமான கருத்துக்களுக்கு எமது வெறுப்பையும் அதிருப்தியையும் தெரிவிப்பதோடு, அதனை வன்மையாகக் கண்டிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தூய பௌத்தத்தை உறுதியாக நம்பும், பௌத்தத்தை நிலைநிறுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் பௌத்தராக அந்த போதகரின் கருத்து குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.

நாட்டில் முன்னர் காணப்பட்டதை விட நல்லிணக்கம், சகோதரத்துவம், மனித நேயம் ஆகியவை வலுவாக கட்டியெழுப்பப்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

எனவே இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களால் மத ரீதியிலான மோதல்கள், வெறுப்பு, கோபம் போன்ற தீய எண்ணங்கள் அனைவர் மத்தியிலும் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகிறது.

இலங்கை நீண்ட காலமாக தூய பௌத்தத்தால் போஷிக்கப்பட்டுள்ள நாடாகும். பௌத்தம் ஒரு உலகளாவிய கோட்பாடாகும். இது எந்த மதத்துக்கோ அல்லது தேசத்துக்கோ உரித்துடையதல்லாத ஒரு உலகளாவிய பொது போதனையாகும்.

வெறுப்புக்குப் பதிலாக பரிவையையும், அவமரியாதைக்குப் பதிலாக மரியாதையையும் அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டவும் உலகிற்கு கற்பித்த ஒரு கோட்பாடாகும்.

பௌத்த மதத்தின் இணக்கமான ஏற்பாடுகளே பிற மதங்களை மதிப்பதற்கும் , அவற்றைப் பின்பற்றுவதற்கான இடத்தை வழங்குவதற்கும் தற்போது வழிவகுத்துள்ளது என்பது வலியுறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.

இதனை சந்தர்ப்பவாதமாகப் பயன்படுத்தி பல்வேறு நபர்களும் குழுக்களும் பௌத்தத்தைக் குறிவைத்து தவறான கருத்துக்களை வெளியிடுவதற்கு எவருக்கும் உரிமையும் இல்லை.

மேற்கூறப்பட்ட மத போதகரால் குறிப்பிடப்பட்ட கருத்து எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிடக் கூடியவையல்ல. எனவே இதன் பின்னனியிலுள்ள சூழ்ச்சி என்ன என்பதை வெளிப்படுத்துவது அவசியம்.

இது போன்று கருத்துக்களை முன்வைப்பவர்களுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியது அரச பொறிமுறை சார்ந்த பொறுப்பாகும். இது தொடர்பில் முழு நாடும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment