டொலர் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் அடுத்த வாரத்தில் மருந்துகளின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மருந்துகளின் விலையை எந்தளவுக்கு குறைக்க முடியுமென்பது தொடர்பில் நிதி அமைச்சும் சுகாதார அமைச்சின் கணக்கியல் பிரிவும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் நேற்று (17) காலை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், டொலரின் விலை அதிகரிப்புடன் மருந்துப் பொருட்களின் விலையும் கணிசமானளவு அதிகரித்துள்ளதாகவும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் பயனை மக்களுக்கு வழங்கவே சுகாதார அமைச்சு எப்போதும் முயற்சிப்பதாகவும் அவர்தெரிவித்தார்.
விற்பனைக்காகவோ அல்லது வேறேதும் அவசிய தேவைகள் நிமித்தம் மருந்து வகைகள் சேமிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் குளிரூட்டப்பட்டதாக இருக்க வேண்டுமெனவும் இதன் காரணமாக மருந்து விற்பனையாளர்கள் மற்றும் களஞ்சியப்படுத்துவோர் தாம் அதிக மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், விலையை குறைப்பதில் இவ்விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் வார்டுகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் துரித கதியில் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனைச் சாதகமாகப் பார்த்து யோசனைகளையும் ஆலோசனைகளையும் முன்வைப்பதற்குப் பதிலாக சிலர் அரசியல் மற்றும் ஏனைய தேவைகளை அடிப்படையாக வைத்து அடிப்படையற்ற விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
எம்.ஏ.அமீனுல்லா
No comments:
Post a Comment