மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் மாவிலங்கத்துறை பிரதேசத்தில் வசித்து வரும் குடும்பங்கள் தமது வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க கோரி இன்று (15) திங்கட்கிழமை காலை இலங்கை மின்சார சபை காத்தான்குடி அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
ஒல்லிக்குளம் மாவிலங்கத்துறை பிரதேசத்தில் 47 குடும்பங்கள் வசித்து வரும் தற்காலிக வீடுகள் மற்றும் நிரந்தர வீடுகள் 47 வீடுகளுக்கு புதிய மின் இணைப்புக் கோரி அப்பகுதி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்து பல மாதங்களாகியும் இன்னும் தமது வீடுகளுக்கான புதிய மின் இணைப்பு வழங்கப்படவில்லை எனவும் மின்சாரம் இல்லாததால் மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்குவதகாவும் புதிய மின் இணைப்பைத் தருமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மின்சார சபையே பாரபட்சம் காட்டாமல் மின் இணைப்பை வழங்கு, மின் இணைப்பு வழங்காமல் எங்களை இருளில் வாட்டாதே, புதிய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்து 9 மாதங்கள் கடந்தும் ஏன் இந்த பாரபட்சம் என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தாக்கியிருந்தனர்.
இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி அலுவலக மின் அத்தியட்சகர் கணகசபை சிவேந்தரனிடம் கேட்டபோது, இங்கு வசிக்கும் குடும்பங்கள் புதிய மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்த விண்ணப்பங்களின் பிரகாரம் அதற்காக மதிப்பீடுகள் செய்யப்பட்டு அனுப்பினோம். அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் குறித்த வீடுகள் அமையப் பெற்றுள்ள பகுதிக்கு மின் தூண்கள் இடப்பட்டு மின் கம்பிகள் போடப்படல் வேண்டும் இதற்கான பணம் இலங்கை மின்சார சபையிடம் இல்லை.
ஏற்கனவே இந்த வேலையை இலங்கை மின்சார சபை செய்து வந்தது. தற்போது இதனை செய்ய இலங்கை மின்சார சபையிடம் பணமில்லை.
இந்த நிலையில் இதற்கான பொறுப்பை இந்தக் குடும்பங்கள் எடுக்குமாயின் புதிய இணைப்புக்களை வழங்க முடியும். இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வரும். இதனை இந்த வறிய குடும்பங்களினால் செய்ய முடியாது.
எனினும் இது தொடர்பாக எமது மேலதிகாரிகள் மற்றும் மாகாண மட்ட அத்தியட்சகருக்கு அறிவித்துள்ளோம். இதற்காக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.
எம்.எஸ்.எம்.நூறுதீன்
No comments:
Post a Comment