ஐ.எம்.எம் நாஸிம்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக கிழக்கு பக்கத்தில் சுமார் 40 இற்கும் மேற்பட்ட மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் வலயக் கல்வி அலுவலகத்தின் நுளைவாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இன்னுமொரு தரப்பினராக ஒரு சில மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் குறித்த அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டாமென்று கோசமிட்டு சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக மேற்குப் பக்கத்தில் நின்று வலயக் கல்வி அலுவலகத்தின் நுளைவாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விரு ஆர்ப்பாட்டங்களும் திங்கட்கிழமை இன்று (29) காலை 09 மணியளவில் நடைபெற்றது.
குறித்த இரு சாரரினதும் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிடங்கள் நீடித்தன. இதேவேளை, சம்மாந்துறை பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.
அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிபர் வேண்டும், எங்கள் பிள்ளைகளின் விடுதலைப் பத்திரத்தை தா, போன்ற கோசங்களை எழுப்பினார்கள்.
இதேவேளை, அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டாமென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழுவுக்கு தெரியாமல் சுமார் 42 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிடத்தை நிர்மாணம் செய்த ஊழல் மிக்க அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டாமென்று கோசமிட்டனர்.
இந்நிலையில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். செய்யத் உமர் மௌலானா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களினால் கையளிக்கப்பட்ட மகஜரையும் பெற்றுக் கொண்டார்.
அத்தோடு தங்களின் கோரிக்கைகளை மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர்களுக்கு அறிவிவித்து அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment