(எம்.மனோசித்ரா)
நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சையின்போது பயன்படுத்தப்பட்ட மருந்தொன்றில் காணப்பட்ட கிருமி காரணமாக, சத்திர சிகிச்சை மேற்கொண்ட சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போது அந்த மருந்து பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் நோயாளர்கள் அச்சமடையத் தேவையில்லை என்று கண் சத்திர சிகிச்சை தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் விசேட கண் வைத்திய நிபுணர் கபில் பந்து திலக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட சிலருக்கு ஒரு வகை கிருமி தொற்று இனங்காணப்படுவதற்கு முன்னரே இவ்வாறான நிலைமை, நுவரெலியா பொது வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
எவ்வாறிருப்பினும் தற்போது இது தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழமைபோன்று தற்போது கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சத்திர சிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்பட்டதை பரிசோதனை அறிக்கைகள் உறுதிப்படுத்தியிருந்தன. எனவே அந்த மருந்து தற்போது பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் சிலர் விழிப்புலனை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
புத்தாண்டுக்கு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை மற்றும் பல வைத்தியசாலைகளில் இவ்வாறான தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. இவை குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் தலையீட்டில், இந்த வகையான அவசரநிலை முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய அதற்கான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன்போதே குறிப்பிட்ட மருந்தொன்றில் கிருமி இருப்பது இணங்காணப்பட்டது.
ஆய்வறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தியதையடுத்து அந்த மருந்து பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது மருத்துவமனைகளில் சாதாரண முறையில் கண் சத்திர சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து நோயாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.
No comments:
Post a Comment