(நா.தனுஜா)
விவசாயத்துறையின் செயற்திறனை மேம்படுத்துவதுடன் விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கம் சுமார் 4 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.
நாடளாவிய ரீதியில் வறட்சியான நிலப்பரப்பைக் கொண்ட தெரிவுசெய்யப்பட்ட மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உதவ முன்வந்திருக்கும் ஜப்பான் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக 4,629,629 டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.
சிறிய நிலப்பரப்புக்களில் பயிர் செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் தமது சுயதேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் பயிர்ச் செய்கைக்குரிய கடந்த இரு பருவ காலங்களிலும் ஏற்பட்ட உரத்தட்டுப்பாட்டின் விளைவாகப் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் அவ்விவசாயிகள், அதனைக் கையாள்வதற்காக அடகு வைத்தல், கடன் பெறல் போன்ற மாற்றுவழிகளைத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் மிகவும் வறட்சியான மாவட்டங்களில் ஒரு ஹெக்டேயருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் பயிரிடுகின்ற சுமார் 250,000 விவசாயிகளுக்கு ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவி மூலம் 50 கிலோ கிராம் யூரியா உரம் வழங்கப்படும். இதன் விநியோக நடவடிக்கையானது விவசாயத்துறை அமைப்பு மற்றும் விவசாய அபிவிருத்தித் திணைக்களம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும்.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிஸுகோஷி ஹிஷேகி, 'வெளிநாட்டுக் கையிருப்புப் பற்றாக்குறையின் விளைவாக உரத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மேலதிக மனிதாபிமான உதவியாக அதனை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இது தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் உணவுப் பொருள் நெருக்கடியை ஓரளவு தணிப்பதற்கு உதவும் என்று நம்புகின்றோம்' என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment