இலங்கைக்கு, இந்தியா வழங்கிய 1 பில்லியன் டொலர் கடன் சலுகைக் காலம் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 30, 2023

இலங்கைக்கு, இந்தியா வழங்கிய 1 பில்லியன் டொலர் கடன் சலுகைக் காலம் நீடிப்பு

அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2022 மார்ச்சில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் காலம், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய ஸ்டேட் வங்கியால் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கால நீடிப்புக்கான திருத்த உடன்படிக்கையானது நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கே, இலங்கை நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் முன்னிலையில் 30 மே 2023 இல் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இதேவேளை இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் இந்நிகழ்வில் மெய்நிகர் மார்க்கமூடாக இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உடன்படிக்கை கைச்சத்திடப்பட்டமையின் பிரகாரம் 2024 மார்ச் வரையிலான மற்றொரு வருட காலப்பகுதிக்கு இந்த கடன் வசதியினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வருடம் முதல் எரிபொருள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் தேவைக்கு அமைவாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் அவசரமாக இறக்குமதி செய்வதற்கு இந்த கடனுதவி திட்டம் பயன்படுத்தப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும். .

இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் பல்வேறு கடனுதவி திட்டங்கள் மற்றும் நாணய உதவிகள் ஊடாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பல்நோக்கு உதவி கடந்த வருடம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது. 

இலங்கையின் துரித பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்கும் எமது நிலையான அர்ப்பணிப்புக்கான ஓர் சாட்சியமே இலங்கைக்கான இந்திய ஆதரவு என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment