(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
காலி முகத்திடல் போராட்டக்களத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு நடிகர். அரசியல் நெருக்கடி தீவிரமடைந்த வேளையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், சரத் பொன்சேகா ஆகிய இருவரும் வழிநடத்தினார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் மீதான இரண்டாம் நாள் விவாத்தின்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, காலி முகத்திடல் போராட்டக்களம் இராச்சியத்தை வீழ்த்தும் அரசியல் சூழ்ச்சியின் இருப்பிடம். 2022 ஆம் ஆண்டு மே மாதம் 09, ஜூன் 09 மற்றும் ஜூலை 09 ஆகிய திகதிகளில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்த சம்பவங்களின் பின்னணியை நான் நூலாக வெளியிட்டுள்ளேன்.
ஜனநாயக போராட்டம் என்று குறிப்பிட்டுக் கொண்டு நாட்டை லிபியாவாக மாற்ற முன்னெடுக்கப்பட்ட திட்டத்தை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தியுள்ளேன். உண்மை வெளிப்பட்டுள்ளதால் ஒரு தரப்பினர் தற்போது கலக்கமடைந்துள்ளார்கள். இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் டுவிட்டர் பதிவில் நாம் வெளியிட்ட விடயங்களை புறக்கணித்துள்ளார்.
காலி முகத்திடல் போராட்டக்களத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தாக்கப்பட்டார். போராட்டக்களத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு நடிகர். கடந்த ஆண்டு நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்தபோது இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரே வழிநடத்தினார்கள் என்றார்.
No comments:
Post a Comment