(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்பது ஆளும் தரப்பு உறுப்பினர்களின் தனிப்பட்ட தீர்மானமே தவிர கட்சியின் தீர்மானமல்ல. நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய சிறந்த தீர்மானத்தை உரிய நேரத்தில் அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தபோது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களிடம் பலமுறை அழைப்பு விடுத்தோம்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசாங்கத்தை பொறுப்பேற்றால் தமது எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ ? என்ற அச்சத்தில் அவர்கள் அரசாங்கத்தை ஏற்கவில்லை.
நெருக்கடியான சூழ்நிலையில் சவால்களை பொறுப்பேற்க ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவை இடைக்கால ஜனாதிபதியாக தெரிவு செய்யும் தீர்மானத்தை கட்சி மட்டத்தில் முன்னெடுத்தோம். 134 உறுப்பினர்களின் ஆதரவுடன் அவரை ஜனாதிபதியாக்கினோம்.
அரசியலுக்கு அப்பாற்பட்ட வகையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கமாக செயற்படுவதால் எமது கட்சியின் அடிப்படை கொள்கைகளை தேசிய மட்ட தீர்மானங்களின்போது விட்டுக் கொடுக்க முடியாது. கட்சியின் கொள்கைகளை பாதுகாத்துக் கொண்டு அரசியல் தீர்மானங்களை எடுப்போம்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என ஆளும் தரப்பின் உறுப்பினர்களில் ஒரு சிலர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட கருத்தே தவிர கட்சியின் தீர்மானம் அல்ல. 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளத் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்துவது அவசியமற்றது.
நாட்டு மக்களின் கோரிக்கைக்கு அமைய சிறந்த தீர்மானத்தை உரிய நேரத்தில் அறிவிப்போம். சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல் அரசியல் செய்பவர்களை இணைத்துக் கொண்டால் ஸ்தீரமற்ற அரசாங்கம் தோற்றம் பெறும். நிலையான அரசாங்கத்தை அமைக்க அவதானம் செலுத்தியுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment