அரசாங்கத்துடன் இணைபவர்களின் நோக்கம் பணமும், அமைச்சுப் பதவியும் மாத்திரமே - ஹர்ஷண ராஜகருணா - News View

About Us

About Us

Breaking

Thursday, April 6, 2023

அரசாங்கத்துடன் இணைபவர்களின் நோக்கம் பணமும், அமைச்சுப் பதவியும் மாத்திரமே - ஹர்ஷண ராஜகருணா

(எம்.மனோசித்ரா)

எதிர்க்கட்சியிலிருந்து எவரேனும் அரசாங்கத்துடன் இணைவார்களாயின் அவர்களின் நோக்கம் பணமும், அமைச்சுப் பதவிகளுமே தவிர நாட்டின் அபிவிருத்தி அல்ல. அமைச்சுப் பதவியில் மோகமும், 200 மில்லியனை விரும்புபவர்களுமே அரசாங்கத்துடன் இணைவர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆளுந்தரப்பினர் கூறுவதைப் போன்று எதிர்க்கட்சியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை. மாறாக எவரேனும் இணைவார்களாயின் அது 200 மில்லியன் ரூபாவுக்கும், அமைச்சுப் பதவிகளுக்குமேயாகும். 200 மில்லியனை விரும்புபவர்களும் இருக்கக் கூடும். அவ்வாறானவர்கள் அரசாங்கத்தில் இணைவது நாட்டுக்காக அல்ல.

மக்களுக்கு நன்மையான திட்டங்களுக்கு எதிர்க்கட்சியிலிருந்து கொண்டே நிச்சயம் ஒத்துழைப்பினை வழங்குவோம். அதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டுமென்ற தேவை கிடையாது.

பிரதான எதிர்க்கட்சியாக நாம் எமது கடமைகளை நிறைவேற்றுவோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருவதற்கு முன்னரே 2019 இல் சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தினோம்.

அன்று நாம் கூறியதை முற்றாக எதிர்த்தவர்கள் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறியவுடன், மேசைகளைத் தட்டி கரகோஷம் எழுப்புகின்றனர். இவ்வாறான இரட்டை நிலைப்பாடுடையவர்களே அரசாங்கத்தில் உள்ளனர்.

எதிர்க்கட்சியிலிருந்து எவரேனும் அரசாங்கத்தில் இணைவார்களாயின் அமைச்சுக்கள் அதிகரிக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் மீதான சுமை மேலும் உயர்வடையுமே தவிர, நாட்டுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது என்றார்.

No comments:

Post a Comment