52 நிறுவனங்களின் தலைவர், பணிப்பாளர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இதுவரை செயற்படுத்தப்படவில்லை - சம்பிக்க ரணவக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, April 30, 2023

52 நிறுவனங்களின் தலைவர், பணிப்பாளர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இதுவரை செயற்படுத்தப்படவில்லை - சம்பிக்க ரணவக்க

(இராஜதுரை ஹஷான்)

சர்வதேச நாணய நிதியத்தின் வரிக் கொள்கை மறுசீரமைப்பு நிபந்தனையை விரைவாக செயற்படுத்திய அரசாங்கம் நிர்வாக கட்டமைப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் தொடர்பான நிபந்தனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. 52 அரச நிறுவனங்களின் தலைவர், பணிப்பாளர்கள் அரசியல் தலையீடு இல்லாமல் தகுதி, துறைசார் திறமையுடன் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை இதுவரை செயற்படுத்தப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

43 ஆவது படையணி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட வசதியினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மாத்திரம் சட்ட அந்தஸ்து கிடைத்து விடாது. நிபந்தனைகளின் ஒரு சிலவற்றை செயற்படுத்த இராச்சியங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களை சட்டமாக்குவது தொடர்பில் 'இராச்சியங்கள் தொடர்பான சட்டத்தின்' 157 ஆவது உறுப்புரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாணய நிதியத்தின் தீர்மானங்களை செயற்படுத்துவது தொடர்பில் ஒரு சில சட்டங்கள் இயற்றப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நீடிக்கப்பட்ட முழுமையான நிதி வசதியை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் சர்வதேச நாணய நிதியம் பிரதானவையாக முன்வைத்துள்ள மத்திய வங்கி சுயாதீனப்படுத்தல் சட்டம், ஊழல் ஒழிப்பு சட்டம் ஆகியன இயற்றப்பட வேண்டும். நாடு என்ற ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ள பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளோம் என்பதை அரசியல் தரப்பினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெற்றவுடன் ராஜபக்ஷர்கள் புனிதர்களாக்கப்பட்டுள்ளார்கள். நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி சர்வதேசத்திடம் கையேந்தும் நிலையை ராஜபக்ஷர்கள் தோற்றுவித்தார்கள் என்பதை மக்கள் மறக்கக்கூடாது. 2019 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தி 89 பில்லியன் டொலராக காணப்பட்டது. 2020 ஆம் ஆண்டு 85 டொலராகவும், 2022 ஆம் ஆண்டு 75 பில்லியன் டொலராகவும் குறைவடைந்தது.

குறுகிய காலத்தில் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள வேண்டுமாயின் சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள் இரத்து செய்யப்படும் என குறிப்பிடப்படுவது அடிப்படையற்றது.

நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை எட்டு மடங்காக அதிகரிக்குமாறு நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரித் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

வரிக் கொள்கை மறுசீரமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் விரைவாக செயற்படுத்தியுள்ளது. அரச நிர்வாக கட்டமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட மூன்று பிரதான நிபந்தனைகளை அரசாங்கம் இதுவரை செயற்படுத்தவில்லை.

இலங்கை மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், அரச வங்கிகள் உட்பட தெரிவு செய்யப்பட்ட 52 அரச நிறுவனங்களுக்கான தலைவர், பணிப்பாளர் ஆகியோர் அரசியல் தலையீடுகள் இல்லாமல் திறமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

52 அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நியமணம் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றும் இடம்பெறுகிறது. இந்த நிறுவனங்களுக்கான உயர் பதவி நியமணங்கள் அரசியலமைப்பு பேரவை ஊடாக இடம்பெற வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.

இரண்டாவதாக 52 அரச நிறுவனங்களின் கணக்காளர் நாயகத்தின் மதிப்பீட்டு அறிக்கை கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவில்லை.

மூன்றாவது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் விடயதானம் எதிர்வரும் ஜூலை மாதத்துக்கு முன்னர் திருத்தியமைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சிறந்த நிபந்தனைகளை அரசாங்கம் முறையாக செயற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment