யாழ்ப்பாணம், காங்கேசன்துறையை அண்டிய கடற்பகுதியில், சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சோதனையிட்டதில் 428 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் 02 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
நேற்றையதினம் (02) இரவு கைப்பற்றப்பட்ட குறித்த போதைப் பொருள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதோடு, அங்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (03) முற்பகல் பார்வையிட்டார் .
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் பிரகாரம் கடற்படையினர் இலங்கைக்கு உட்பட்ட கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
அதன் பிரகாரம், போதைப் பொருள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கடற்படை தனது முழு முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நேற்று (02) இரவு காங்கேசந்துறை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில், வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையின் நான்காவது விரைவுத் தாக்குதல் படைப்பிரிவின் P423 விரைவுத் தாக்குதல் ரோந்துப் படகு, சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றை அவதானித்துள்ளது. குறித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை இடைமறித்து சோதனையிட்டபோது, 13 மூடைகளில் சுமார் 428 கிலோ 900 கிராம் எடையுள்ள 195 கேரள கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
இந்நடவடிக்கையில் சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேகநபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இன்று (03) காலை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை பரிசோதிப்பதற்காக கடற்படைத் தளபதியும் துறைமுகத்திற்கு வந்திருந்தார். இந்நிகழ்வில் பேசிய அவர், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படை வீரர்களின் முயற்சிகளை பாராட்டினார்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு ரூ. 141 மில்லியன் (ரூ. 14 கோடி 10 இலட்சம்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனலைதீவு பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 37 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 02 பேரும் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment