எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தொடர்பில் அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கமைய செயற்படுங்கள் - சபாநாயகரிடம் வலியுறுத்திய ஆளும் கட்சித் தலைவர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 1, 2023

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தொடர்பில் அரசியலமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கமைய செயற்படுங்கள் - சபாநாயகரிடம் வலியுறுத்திய ஆளும் கட்சித் தலைவர்கள்

முனீறா அபூபக்கர் 

எதிர்க்கட்சிகளின் கோரிக்கை தொடர்பில் அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கமைய செயற்படுமாறு சபாநாயகரிடம் ஆளும் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை  வழங்குமாறு எதிர்க்கட்சிகள் நேற்று (28) சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய சபாநாயகரை செயற்படுமாறு அரசாங்கத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.

ஆளும் கட்சியின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இன்று (1) பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்த போதே பிரதமர் தினேஷ் குணவர்தன இதனை வலியுறுத்தினார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் நேற்று (28) சபாநாயகரை சந்தித்து கோரிக்கை விடுத்தன.

அத்துடன், நிதியமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைத்து இவ்விடயம் தொடர்பில் விசாரிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர், இவ்விடயம் தொடர்பில் ஆளும் கட்சியின் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (01) பிற்பகல் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

நிதி அமைச்சின் செயலாளரை பாராளுமன்றத்திற்கு அழைக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என சுட்டிக்காட்டிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு கோருவதற்கும் எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்தார்.

அத்துடன் சட்ட மன்றம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று அடிபணியாத நிறுவனங்கள் எனவும்  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலியுறுத்தினார்.

அச்சுறுத்தல் காரணமாகவே நிதிக் குழுத் தலைவர் பதவி விலகுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டிய கட்சித் தலைவர்கள், இது பாராளுமன்ற உறுபினர்களின் சிறப்புரிமையை மீறும் செயல் என்பதால் இது குறித்து ஆராய்வதற்கு தெரிவுக் குழுவை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் பிரதமர் தினேஷ் குணவர்தன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர, காஞ்சன விஜேசேகர, டிரான் அலஸ், நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, வஜிர அபேவர்தன, எஸ்.எம்.எம்.முஷாரப், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், சி.பி.ரத்நாயக்க, காமினி லொகுகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment