அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை, கல்வித்துறை, பல்கலைக்கழகங்கள், அரச நிர்வாக சேவை, வங்கி, துறைமுகம், பெற்றோலியத்துறை, நீர் வழங்கல் துறை, தபால் சேவை உள்ளிட்ட அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையைச் சேர்ந்த சுமார் 40 தொழிற்சங்கங்கள் இன்று புதன்கிழமை (1) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தன.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக அத்தியாவசிய சேவைகள் முற்றாக முடங்காத போதிலும், வங்கி, எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், துறைமுகம் உள்ளிட்டவற்றின் சேவைகள் வழமைக்கு மாறாக மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்றன.
எவ்வாறிருப்பினும் எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து சேவைகளும் முடங்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.
வைத்தியசாலைகள்
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு வைத்தியர்கள், தாதிகள் மற்றும் வைத்தியசாலை சிற்றூழியர்கள் உள்ளிட்ட தரப்பினரும் ஆதரவளித்திருந்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, தென் கொழும்பு ஆதார வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான வைத்தியர்கள், ஊழியர்கள் இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணி பகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்தனர்.
இதன் காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். எவ்வாறிருப்பினும் அவசர மருத்துவ சேவைகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி
பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்டவற்றில் கற்றல் கற்பித்தில் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்றன.
அத்தோடு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையும் வழமை போன்று பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் அதிபர்கள் மற்றும் பேராசிரியர்கள் கறுப்பு நிற ஆடையணிந்து சேவைக்கு சமுகமளித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். அத்தோடு சில பாடசாலைகளில் கறுப்பு கொடிகளும் ஏற்றப்பட்டிருந்தன.
வங்கி
தமது வாடிக்கையாளர்களுக்கு தடையின்றி சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கித் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ மற்றும் இலங்கை வங்கித் தலைவர் சட்டத்தரணி ரொனால்ட் சி பெரேரா ஆகியோர் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுடனான சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
எவ்வாறிருப்பினும் இன்று பல பிரதேசங்களிலுமுள்ள மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பெற்றோலியம்
பெற்றோலியத்துறைசார் ஊழியர்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்தமையின் காரணமாக கொலன்னாவ மற்றும் முத்துராஜவெலையிலிருந்து எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கான விநியோகம் தாமதமடைந்தமையின் காரணமாக சில பிரதேசங்களில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
துறைமுகம்
துறைமுக சேவைகளிலுள்ள தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் சட்டப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
துறைமுக சேவையிலுள்ள சகல தொழிற்சங்க உறுப்பினர்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கங்களினால் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு துறைமுக சேவை தொழிற்சங்களைச் சேர்ந்த 9,000 பேர் இதற்கு ஆதரவளித்தாகவும் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும் துறைமுக சேவைகள் முற்றாக முடங்கவில்லை என்றும், எனினும் வழமையை விட சிறு மந்தகதியில் செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத் பேர்னாட் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment