2023 வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வித தடையுமின்றி விடுவிக்குமாறு, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இடைநிறுத்தி வைப்பதற்கு எதிராக, உயர் நீதிமன்றம் குறித்த இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தலுக்கு நிதி வழங்கக் கோரி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவை பரிசீலிக்க அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பீ. பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.
அத்துடன், வாக்குச் சீட்டு அச்சடிக்க அரச அச்சகத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்கும் மற்றொரு இடைக்கால உத்தரவையும் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த நிதியமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இத்இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
குறித்த மனு பரிசீலனை எதிர்வரும் மே 26ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
No comments:
Post a Comment