உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதியை அடுத்த வார ஆரம்பத்தில் தீர்மானிக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய அறிவித்தலொன்றை விடுத்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க அச்சகம், நிதியமைச்சு, பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட ஏனைய தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான புதிய திகதியை அடுத்த வார ஆரம்பத்தில் தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) கூடியிருந்த நிலையில், இன்றையதினம் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கின் உத்தரவின் அடிப்படையில், குறித்த திகதியை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பு தெரிவித்துள்ளது.
குறித்த திகதியை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட மனுவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2023 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து, நிதி அமைச்சர் மற்றும் அதன் செயலாளர், சட்ட மாஅதிபர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார எம்.பியினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு, ப்ரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா, பிரியந்த ஜயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதனை பரீசீலிப்பதற்கு அனுமதியளித்த உயர் நீதிமன்றம் குறித்த இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment