(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை பதவி நீக்கம் செய்ய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகபெரும உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கடந்த வாரம் இடம்பெற்ற நிறைவேற்று சபைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என ஆளும் தரப்பினர் முன்வைத்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு, ஜி.எல். பீரிஸை தவிசாளர் பதவியில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தவிசாளர் பதவி நியமனம் தொடர்பில் இரு வேறுபட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிரேஷ்ட அரசியல்வாதியை தவிசாளராக நியமிக்க வேண்டும் என ஒருதரப்பினரும், சிரேஷ்ட சிவில் பிரஜை ஒருவரை தவிசாளராக நியமிக்குமாறு பிறிதொரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளார்கள்.
முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பரிசீலனை செய்து வெகுவிரைவில் தவிசாளர் ஒருவரை நியமிக்க நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளது, புதிய நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்சிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment