இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காகப் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (07) கூடிய அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் குழு, கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ மற்றும் கட்டமைப்புக் குறித்த முறைகேடுகள் தொடர்பில் முழுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியது.
சர்வதேச வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் ஏற்றுமதியாளர்கள், வங்கிகள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களை ஆதரிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஒரு தசாப்தத்திற்குப் பின்னர் கோப் குழு முன்னிலையில் ஆஜராகியிருப்பதாகக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதை எடுத்துக் காட்டியிருந்த கோப் குழு, பொறுப்புவாய்ந்த நிறுவனம் என்ற ரீதியில் கணக்காய்வாளர் நாயகத்திற்கு உதவிகள் வழங்கப்படாமை குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
10 ஆண்டுகளுக்கும் மேலாகப் கூட்டுத் திட்டம் தயாரிக்கப்படவில்லை என்றும், இத்திட்டம் தயாரிக்கப்படாத நிலையில் இந்நிறுவனத்தின் நிர்வாக செயல்முறை எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளரிடம் கோப் குழு கேள்வியெழுப்பியது. அதனடிப்படையில், மிக விரைவில் கூட்டுத் திட்டத்தை முன்வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் குழு வருகைதந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
மேலும், நிதி உட்பட கூட்டுத்தாபனத்தின் 05 முக்கிய பதவிகள் ஏன் வெற்றிடமாக இருக்கின்றன என்பது குறித்தும் கோப் குழு கேள்வியெழுப்பியது. நிறுவனத்தை வழிநடத்துவதில் பொது முகாமையாளரின் செயற்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்த கோப் குழு, அந்தந்த அதிகாரிகளின் புறக்கணிப்பு மற்றும் செயலற்ற தன்மை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கிச் செல்வதில் நிறுவனம் தோல்வியுற்றிருப்பதாகத் தெரிவித்தது.
எனவே, ஸ்திரத்தன்மை மற்றும் சரியான நிறுவன பொறிமுறையை உறுதிப்படுத்த கூட்டுத்தாபனத்தில் காணப்படும் வெற்றிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும் என கோப் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
பாராளுமன்றம், கணக்காய்வாளர் நாயகம் மற்றும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஆகியவற்றுக்குப் பொறுப்புக் கூற இலங்கை ஏற்றுமதிக் கடன் கூட்டுத்தாபனம் தவறியமையையும் கோப் குழுவின் தலைவர் கண்டித்தார்.
அரசாங்கத்தின் முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்கள் எவ்வாறு காணாமல் போயுள்ளன என்றும், இந்தச் செயல்களுக்கு யார் பொறுப்பு என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
இலங்கை ஏற்றுமதிக் கடன் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறும் முறைகேடுகளைக் கண்காணிப்பதில் நிதி அமைச்சின் அக்கறையின்மை குறித்து கவலையை வெளிப்படுத்திய கோப் குழுவின் தலைவர், நிறுவனத்தின் தகவல்கள் காணாமல் போனமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்த விடயத்தில் நிறுவனத்தின் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
அத்துடன், நிதி அமைச்சுடன் இணைந்த உள்ளகக் கணக்காய்வாளர் அடங்கிய சுயாதீன குழுவை நியமித்து, கூட்டுத்தாபனத்தின் நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. நிறுவனத்தின் பொது முகாமையாளரின் நடவடிக்கைகள் குறித்து தனியாக விசாரணை நடத்தி ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு முன்னர் குழுவிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் நிதி அமைச்சுக்குப் பரிந்துரை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், இராஜாங்க அமைச்சர்களான ஜகத் புஷ்பகுமார, ஜனக வக்கும்புர, லொஹான் ரத்வத்த, இந்திக்க அனுருத்த ஹேரத், சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, இரான் விக்கிரமரத்ன, நிமல் லான்சா, எஸ்.எம்.எம்.முஷாரப் சஞ்சீவ எதிரிமான்ன, ஜகத் குமார சுமித்ராராச்சி, (மேஜர்) சுதர்சன தெனிபிட்டிய, பிரேம்நாத் சி.தொலவத்த, உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சாணக்கியன் இராசமாணிக்கம், மதுர விதானகே ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment