எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தை அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்திக் சேவைக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதி வசதியளிப்பு பொதியின் முன்னேற்றம் தொடர்பான முதலாவது மீளாய்வு 6 மாதங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அதற்கு முன்னர் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதியளிப்பின் கீழ் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் வசதிக்கான இறுதி முடிவு எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிறைவேற்று சபையின் கூட்டத்தில் எட்டப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரந்துபட்ட நிதி வசதி தொடர்பான பணிக்குழாம் மட்ட ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்படுமென தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர், கடன் மறுசீரமைப்பதற்கான எமது முயற்சிகளை அதில் காணலாமெனவும், நீண்ட கால அடிப்படையில் கடன் நிலைபேறானதன்மையை அடைவதற்கான நடுத்தர கால கடன் இலக்குகள் அதில் வெளிப்படுத்தப்படுமெனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பீ. நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நடுத்தரம் முதல் நீண்ட கால கடன் இலக்குகளை எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்பதை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்ட தினமொன்றில் தெரிவிப்போமெனவும் அதுவே எமது அடுத்த கட்டமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு விதிமுறைகளை இறுதி செய்வதற்கு முன்னர் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை துரிதப்படுத்துவதுடன் அவர்களுடன் கலந்தாலோசித்து கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தை நாடு அறிவிக்கும் என மத்திய வங்கி ஆளுநர் ரொய்ட்டரஸ் செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்த IMF மீளாய்வு முடிவதற்குள் எதிர்வரும் ஆறு மாதங்களில் இறுதி செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் பிரகாரம் பத்து வருட காலப்பகுதிக்குள் கடன் மறுசீரமைப்பை நிலைநிறுத்தக்கூடிய தன்மையை இலங்கை மீட்டெடுக்க வேண்டுமெனவும், அக்காலப்பகுதியில் கடன் அளவைக் குறைப்பதற்கான திட்ட வரைபடத்தை இலங்கை வழங்கும் என்றும் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, 2029 ஆம் ஆண்டு வரை இலங்கை வருடாந்தம் சுமார் 6 பில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செவ்வாய்க்கிழமை (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார், ஆனால் கடனுக்குப் பிந்தைய மறுசீரமைப்பிற்குப் பின்னனர் இந்தத் தொகை குறையுமென மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியும் படிப்படியாக நாட்டின் டொலர் கையிருப்புக்களை அதிகரித்து வருகிறது, பயன்படுத்தக்கூடிய டொலர்கள் கடந்த மாத இறுதியில் சுமார் $600 மில்லியனை எட்டியது. இது ஒரு வருடத்தில் எட்டிய உச்சபட்ச தொகையாகும். இலங்கை சீனாவுடன் $1.5 பில்லியன் டொலர் கையிருப்பு இடமாற்று உடன்படிக்கையை கொண்டுள்ளது. ஆனால் மூன்று மாத இறக்குமதிக்கு உள்நாட்டு கையிருப்பு போதுமாக இருந்தால் மட்டுமே அதைப் பயன்படுத்த முடியும். எனவே நாம் டொலர் கையிருப்புகளை அதிகரித்தால், சீனாவின் டொலர் கையிருப்பு இடமாற்றத்தை பயன்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கி ஏற்கனவே வெளியிட்டிருந்த எதிர்வுகூறலிலும் பார்க்க பணவீக்கம் மிக வேகமாக குறைய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ள நந்தலால் வீரசிங்க, பணவீக்கம் குறைந்துள்ளது, ஆனால் அது 50% இற்கு மேல் உள்ளதை சமீபத்திய பெப்ரவரி மாத பண அச்சிடல் காட்டுவதோடு, விலைவாசி உயர்வு இங்கு முக்கிய பிரச்சினையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இவ்வருட டிசம்பரில் பணவீக்கம் 4% - 6% ஆக இருக்குமென தனது எதிர்பார்ப்பு இருந்ததாகவும், தான் தற்போது அதன் இறுதிப் பகுதியை விட, 4ஆவது காலாண்டின் ஆரம்பத்திலேயே இதை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநரர், ஒக்டோபர் மாத இறுதியில் இருந்து இச்செயன்முறை வேகமாக இடம்பெறுமென நந்தலாவல் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment