கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, கரைச்சி ஆகிய பகுதிகளில் உள்ள கால்நடைகள் பெரியம்மை (இலம்பி) நோயின் தாக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி, இயக்கச்சி, பளை, உருத்திரபுரம், நீவில் போன்ற பகுதிகளில் உள்ள அதிகளவான கால்நடைகளுக்கு பெரியம்மை எனப்படும் 'இலம்பி' நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக கால்நடைப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இள வயதுடைய கன்றுகள் இவ்வாறு அதிக நோய்த் தாக்கத்துக்குள்ளாகி வருகின்றன.
இந்த நோய் பீடிக்கப்பட்டுள்ள கால்நடைகளின் உடலில் பாரிய கொப்பளங்கள் ஏற்பட்டு, அவை பெரும் புண்ணாக மாறியுள்ளது. அதனால் கால்நடைகள் பெரிதும் அவதிக்குள்ளாகி, இறக்கின்ற நிலைமையே காணப்படுகிறது என்றும் இதன் காரணமாக பால் உற்பத்தி சரிவடைந்துள்ளது என்றும் அதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நோய்த் தாக்கம் தொடர்பாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கால்நடை வைத்தியர் சுப்பிரமணியம் கஜரஞ்சன் கூறுகையில், இந்த நோயானது ஒரு வைரஸ் நோயின் தாக்கமாகும். குறிப்பாக, நுளம்பு, ஈ மற்றும் உண்ணிகள் மூலம் இலகுவில் பரவக்கூடியதாகும்.
கடந்த 2020ஆம் ஆண்டிலும் இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டு பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், வாயிலிருந்து நீர் வடிதல், உணவில் நாட்டமின்மை, உடலில் கொப்பளங்கள் ஏற்படுதல் போன்றவை கானப்படும்.
இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், தமது பகுதி கால்நடை போதனாசிரியர்களையோ அல்லது கால்நடை வைத்தியர்களையோ தொடர்புகொண்டு, அதற்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை தனிமைப்படுத்தி, அவற்றை பராமரிப்பதன் மூலம் இந்த நோயை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பகுதியில் இந்த நோய் வேகமாக பரவி வருவதாக வட மாகாண கால்நடை உற்பத்தி திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, வட மாகாணத்தில் கால்நடை வைத்தியத்துறையில் போதிய ஆளணி பற்றாக்குறை மற்றும் வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக உரிய முறையில் சிகிச்சை வழங்க முடியாத நிலையும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment