யாப்பு, நிறைவேற்று சபை, செயற்குழு என்பதொன்று கிடையாது : ஒரு குடும்பம் கட்சியை நிர்வகிக்கிறது என்கிறார் டலஸ் அழகபெரும - News View

About Us

About Us

Breaking

Monday, March 6, 2023

யாப்பு, நிறைவேற்று சபை, செயற்குழு என்பதொன்று கிடையாது : ஒரு குடும்பம் கட்சியை நிர்வகிக்கிறது என்கிறார் டலஸ் அழகபெரும

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டு மக்களை மாத்திரமல்ல, கட்சி உறுப்பினர்களையும் ஏமாற்றியுள்ளது. கட்சிக்கு யாப்பு, நிறைவேற்று சபை, செயற்குழு என்பதொன்று கிடையாது. ஒரு குடும்பம் கட்சியை நிர்வகிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

மாத்தறை பகுதியில் நேற்றுமுன்தினம் (4) சனிக்கிழமை இரவு இடம்பெற்ற 'சுதந்திர மக்கள் கூட்டணி' வேட்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களாணைக்கு முரணாக செயற்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகிறோம்.

மனசாட்சிக்கமைய செயற்படும் தரப்பினருக்கு எதிராக அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை தற்போது முன்னெடுத்துள்ளது.

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும், பேராசிரியர் ஜி.எல். பீரிஸை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கவும், கட்சியின் நிறைவேற்று சபை தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அனைத்து தடைகளையும் ஓர் ஆசிர்வாதமாக கொள்வோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டு மக்களை மாத்திரமல்ல, கட்சி உறுப்பினர்களையும் ஏமாற்றியுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சிக்கு நிறைவேற்று சபை, கட்சி யாப்பு மற்றும் செயற்குழு என்பதொன்று கிடையாது. ஒரு குடும்பம் கட்சியை நிர்வகிக்கிறது. ஆகவே பொதுஜன பெரமுன ஒரு கட்சியல்ல.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தன்னை ஹிட்லர் என குறிப்பிட்டுக் கொள்கிறார். ஹிட்லரை நாட்டு மக்கள் தெரிவு செய்தார்கள். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாட்டு மக்கள் தெரிவு செய்யவில்லை.

மக்களால் வெறுக்கப்படும் 134 பாராளுமன்ற உறுப்பினர்களால் அவர் தெரிவு செய்யப்பட்டார். ஆகவே, அவர் அவர்களின் தேவைக்காக செயற்படுகிறார். மக்களின் அபிலாஷைகளுக்கு அவர் மதிப்பளிப்பதில்லை என்றார்.

No comments:

Post a Comment