பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் அறியும் சட்டம் பொருந்தும் : தண்டனை ஒரு வருட சிறை அல்லது 1000 ரூபா அபராதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 1, 2023

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் அறியும் சட்டம் பொருந்தும் : தண்டனை ஒரு வருட சிறை அல்லது 1000 ரூபா அபராதம்

றிஸ்வான் சேகு முஹைதீன் 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஏற்பாடுகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் எனவும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்/கடன்கள் தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்கும் கடப்பாடு அவர்களுக்கும் உண்டு எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்து மற்றும் பொறுப்புகள் அறிக்கையை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை வெளியிடுமாறு பாராளுமன்ற, இலங்கை தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து மேன்முறையீட்டு நீதியரசர்களான சம்பத் அபேகோன் மற்றும் பீ. குமாரன் ரட்ணம் ஆகியோர் இந்த உத்தரவை வழங்கினர்.

இத்தீர்மானத்தை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சம்பத் அபேகோன், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களால் நியமிக்கப்பட்டவர்களே என தெரிவித்ததோடு, அவர்கள் பொதுமக்களின் வரிப் பணத்தில் பராமரிக்கப்படுவதாகவும், அவர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்க சட்டப்படி கடமைப்பட்டுள்ளனர் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அத்துடன், அவ்வாறு சொத்துகள் மற்றும் பொறுப்புகளை அறிவிக்காமை சட்டப்படி குற்றமாகும் என்றும், இக்குற்றத்திற்காக அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மிகையாகாத சிறைத் தண்டனை அல்லது ரூ. 1,000 இற்கு மிகையாகாத அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கும் தகுதி நீதவான் ஒருவருக்கு உண்டு என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

தகவல் அறியும் சட்டத்திற்கு அமைய, கடந்த 2018 ஜூன் 21ஆம் திகதி, ஊடகவியலாளர் சாமர சம்பத், சொத்துகள் மற்றும் பொறுப்புகளை அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கோரியிருந்தார்.

ஆனால் குறித்த கோரிக்கையை பாராளுமன்ற செயலாளர் நாயகம் நிராகரித்ததை அடுத்து, ஊடகவியலாளர் சாமர சம்பத் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு, முறைப்பாட்டாளர் கோரிய தகவல்களை வெளியிடுமாறு பாராளுமன்ற தகவல் அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை எதிர்த்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இம்மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதற்கமைய, மிக நீண்ட நாளாக இடம்பெற்ற விசாரணைக்குப் பின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2021 பெப்ரவரி 02ஆம் திகதி தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ததோடு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தாக்கல் செய்த மனுவில் உள்ள விடயங்கள் ஆதாரமற்றவை என அறிவித்து அதனை நிராகரிப்பதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment