(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தின் வரி திருத்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், துறைமுக ஊழியர் சங்கம், மின்சார சபை ஊழியர் சங்கம், நீர் வழங்கல் ஊழியர் சங்கம், வங்கி ஊழியர் சங்கம், பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் புதன்கிழமை (08) பணி பகிஷ்கரிப்பிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டன.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் புதன்கிழமை (08) முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பினால் நாடளாவிய ரீதியிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் முடங்கின.
இதனால் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைகளுக்கு சென்ற நோயாளர்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவிக்கையில், வைத்தியர்கள் உள்ளிட்ட 40 இற்கும் அதிக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தலைமைத்துவத்தை வழங்குகின்றது. அத்தோடு எம்மால் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பும் முன்னெடுக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும் நோயாளர்களின் நலன்கருதி அத்தியாவசிய மருத்துவ சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. அதற்கமைய சிறுவர் வைத்தியசாலைகள், பெண்கள் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியசாலை உள்ளிட்டவற்றில் நாளாந்த வைத்திய சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.
எனினும் இவற்றில் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் கறுப்பு பட்டிகளை அணிந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம்.
அரசாங்கத்தின் புதிய வரி வசூலிப்பு சட்டத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முதற்படியாக கறுப்புப்பட்டி அணிந்துள்ளோம்.
எவ்வாறிருப்பினும் உரிய தரப்பிலிருந்து சாதகமான பதில் கிடைக்கப் பெறாவிட்டால் மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகளில்கூட பணி பகிஷ்கரிப்பிற்கு செல்ல வேண்டியேற்படும்.' என்றார்.
இதேவேளை துறைமுகத்தின் 3ஆம் இலக்க நுழைவாயிலிருந்து ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்த துறைமுக ஊழியர்கள் சங்கம் பேரணியாக வந்து கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மின்சார சபை தலைமையகத்தில் ஆர்ப்பாட்டத்தினை ஆரம்பித்து, கோட்டை புகையிரத நிலையம் வரை பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
நிபந்தனைகள் இன்றி புதிய வரி வசூலிப்பு சட்டத்தை அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதான கோரிக்கையாகக் காணப்பட்டது. அவ்வாறில்லை எனில் இனிவரும் நாட்களில் அனைத்து சேவைகளும் முடங்கும் வகையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தொழிற்சங்கங்களினால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், கோட்டை நீதவான் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் சிவில் சட்டங்களுக்கு முரணாக செயற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கொழும்பு லோட்டஸ் வீதியில் அரச நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால், அந்த வீதியூடான போக்குவரத்துக்கள் மாலை வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment