நேர்முகப் பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற அமைதியின்மைக்கான காரணம் என்ன? விளக்கும் முகவர் நிறுவனங்களின் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 8, 2023

நேர்முகப் பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற அமைதியின்மைக்கான காரணம் என்ன? விளக்கும் முகவர் நிறுவனங்களின் தலைவர்

(எம்.ஆர்.எம்.வசீம்)

துருக்கி நாட்டுக்கான வேலை வாய்ப்புக்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2,650 வேலை வாய்ப்பு தனிப்பட்ட முகவர் நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்றதாகும். அத்துடன் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அனுமதியுடனே அதற்கான நேர்முகப் பரீட்சையும் இடம்பெற்றது. என்றாலும் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் செய்தியால் நேர்முகத் தெரிவு இடம்பெற்ற இடத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியத்தினால் அனுமதிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களின் தலைவர் பாருக் மரிக்கார் தெரிவித்தார்.

துருக்கி நாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக கொழும்பில் இடம்பெற்ற நேர்முகத் தேர்வின்போது ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியத்தினால் அனுமதிக்கப்பட்ட முகவர் நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்படிருந்து செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பு மருதானையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், துருக்கி நாட்டுக்கு இலங்கையர்கள் 2,650 பேருக்கு வேலை வாய்ப்புக்கான அனுமதி இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நியூ ஏசியா ட்ரவல்ஸ் நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்றிருந்தது.

குறித்த நிறுவனம் அதற்காக நேர்முகப் பரீட்சையை நடத்தி துருக்கி நாட்டுக்கு வேலை வாய்ப்புக்கு அனுப்புவதற்கு தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான அனுமதியை பணியகம் வழங்கி இருந்தது.

ஊடகங்களில் அது தொடர்பில் விளம்பரப்படுத்தியதன் பிரகாரம் மருதானை புக்கர் மண்டபத்தில் தொடர்ந்து 3 முறை நேர்முகப் பரீட்சை நடத்தி 900 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான இறுதித் தேர்வு கடந்த மாதம் 25ஆம் திகதி ஜயவர்த்தனபுர மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது அந்த இடத்துக்கு திடீரென ஆயிரக்கணக்கானவர்கள் நேர்முகப் பரீட்சையில் கலந்துகொள்வதற்கு என அங்கு வந்திருந்தனர். சமூக வலைத்தலங்களில் பரப்பப்பட்டிருந்த போலித் தகவலை அடிப்படையாக் கொண்டே இவர்கள் அங்கு வந்திருந்திருந்தனர்.

குறிப்பாக துருக்கி நாட்டுக்கு தொழில் வாய்ப்புக்காக, அரசாங்கத்தினால் இலவசமாக அனுப்பி வைக்கப்படுவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த நடவடிக்கையை குழப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கையாகும் என்றார்.

இதன்போது இங்கு கருத்து தெரிவித்த நியூ ஏசியா ட்ரவல்ஸ் முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் என்.பீ.டீ. ஜப்பார் குறிப்பிடுகையில், துருக்கி நாட்டுக்கான வேலை வாய்ப்பு எனது நிறுவனத்துக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைக்கப் பெற்றதாகும். இதற்கும் அரசாங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த வேலை வாய்ப்பு இலவசமானது அல்ல. ஒரு தொகை பணம் அறவிடுகிறோம். என்றாலும் சமூக வலைத்தலங்களில் மருதானை புக்கர் மண்டபத்தில் நேர்முகப் பரீட்சை இடம்பெறுவதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படியாயின் ஏன் இவர்கள் ஜயவர்த்தனபுர மண்டபத்துக்கு வர வேண்டும் என்றே நான் கேட்கின்றேன்.

அத்துடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து விளம்பரங்கள் கிடைக்கப் பெற்றால், அது தொடர்பான உண்மை நிலையை அறிந்துகொள்ள இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 1989 க்கு அழைப்பு விடுத்து குறித்த முகவர் நிறுவனத்தின் அனுமதி இலக்கத்தை தெரிவித்து, அறிந்து கொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக எந்த முகவர் நிறுவனங்களுக்கும் பணம் வழங்கி யாரும் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றார்.

No comments:

Post a Comment