இல்லாத நிதியை எவ்வாறு வழங்குவது ? - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 28, 2023

இல்லாத நிதியை எவ்வாறு வழங்குவது ? - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திடம் நிதியிருந்தால் தேர்தலுக்காக அதனை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. இல்லாத நிதியை எவ்வாறு வழங்குவது ? மார்ச்சில் வருமானத்திற்கும் செலவிற்குமிடையிலான இடைவெளி 23 பில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு தேர்தலுக்கு நிதியை வழங்குவது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பெற்றுக் கொள்விதில் தலையீடு செய்யுமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் என்பது 225 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் உள்ளடக்கமாகும். அந்த வகையில் ஏனைய அனைத்து கட்சிகளும் இதற்கு உடன்பட்டுள்ள நிலையில், பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு குறித்து செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எம்மிடம் நிதி இருந்தால் அதனை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. மார்ச் மாதம் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கல், ஓய்வூதியம், சமூர்த்தி கொடுப்பனவுகளை வழங்கல் உட்பட ஏனைய தேவைகளுக்காக 83 பில்லியன் ரூபாய் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது.

வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னரும் மார்ச் மாத வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் 23 பில்லியன் இடைவெளி காணப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச்சில் கடன் சேவைகளுக்காக 500 பில்லியன் அவசியமாகும். அதற்கமைய மார்ச்சில் ஒட்டு மொத்தமாக 500 பில்லியனுக்கும் அதிக பற்றாக்குறை ஏற்படும் என்று திறைசேரியினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பெற்றுக் கொள்வதற்கு கடன் பெறவும் முடியாது. பணத்தை அச்சிடவும் முடியாது. அவ்வாறிருக்கையில் முடியாதவொன்றை எவ்வாறு செய்ய முடியும்?

அதேவேளை அரச ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம், சமூர்த்தி கொடுப்பனவு மற்றும் அரச கடனுக்கான வட்டி என்பவற்றை செலுத்துவதை தவிர்க்க முடியாது. எனவேதான் தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினம் என திறைசேரி செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் முன்வைத்துள்ள காரணிகள் தவறென்றால் அதனை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றார்.

No comments:

Post a Comment